எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது: மாவட்டத்தில் 47,955 மாணவ-மாணவிகள் எழுதினர்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த தேர்வை 47 ஆயிரத்து 955 மாணவ-மாணவிகள் எழுதினர்.

Update: 2018-03-16 22:00 GMT
விழுப்புரம், 

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தமிழ் முதல் தாளுடன் தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தேர்வை விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 50 தேர்வு மையங்களில் 7 ஆயிரத்து 359 மாணவர்களும், 7 ஆயிரத்து 273 மாணவிகளும், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 79 தேர்வு மையங்களில் 9 ஆயிரத்து 41 மாணவர்களும், 9 ஆயிரத்து 513 மாணவிகளும், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 50 தேர்வு மையங்களில் 7 ஆயிரத்து 647 மாணவர்களும், 7 ஆயிரத்து 122 மாணவிகளும் எழுதினார்கள்.

ஆக மொத்தம் விழுப்புரம் வருவாய் மாவட்டத்தில் 179 மையங்களில் 24 ஆயிரத்து 47 மாணவர்களும், 23 ஆயிரத்து 908 மாணவிகளும் என 47 ஆயிரத்து 955 மாணவ- மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள்.

முன்னதாக காலை 9 மணி முதலே மாணவ- மாணவிகள் தேர்வு மையத்திற்கு வந்தனர். சரியாக 10 மணிக்கு மாணவ- மாணவிகளுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து படித்து பார்ப்பதற்காக 10 நிமிடம் ஒதுக்கப்பட்டது. பின்னர் 10.10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்பட்டவுடன் அதில் மாணவ- மாணவிகள் தங்களது பெயர், பள்ளியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை எழுத 5 நிமிடம் ஒதுக்கப்பட்டு 10.15 மணிக்கு தேர்வு தொடங்கியது. மாணவ- மாணவிகள் ஆர்வமுடனும், அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் தேர்வு எழுதினார்கள். தேர்வு மதியம் 12.45 மணிக்கு முடிவடைந்தது.

தேர்வில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் இருக்க கண்காணிக்கும் பணியில் முதன்மை அறை கண்காணிப்பாளர்கள், தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், துறை அலுவலர்கள் என 3 ஆயிரத்து 500 பேரும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமையிலும், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அடங்கிய 400 பறக்கும் படை குழுவினரும் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டார். அப்போது தேர்வு மையங்களில் தடையில்லா மின்சார வசதி கொடுக்கப்பட்டுள்ளதா? எனவும் மாணவ- மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளனவா? என ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, தாசில்தார் சுந்தர்ராஜன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்