தனியார் வாடகை கார்களும் கியாஸ் மூலம் இயக்கப்படுவது கட்டாயம் மந்திரி திவாகர் ராவ்தே அறிவிப்பு

மும்பையில் தனியார் வாடகை கார்களும் கியாஸ் மூலம் இயக்கப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று மேல்-சபையில் மந்திரி திவாகர் ராவ்தே கூறினார்.

Update: 2018-03-16 22:15 GMT
மும்பை,

மும்பையில் தனியார் வாடகை கார்களும் கியாஸ் மூலம் இயக்கப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று மேல்-சபையில் மந்திரி திவாகர் ராவ்தே கூறினார்.

கியாஸ் மூலம்


மும்பையில் தற்போது ஆட்டோ, டாக்சிகள் சி.என்.ஜி. எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவினால் (கியாஸ்) இயக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல்களில் இயங்கும் வாகனங்களை காட்டிலும், சி.என்.ஜி.யில் இயக்கப்படும் ஆட்டோ, டாக்சிகளால் குறைந்த அளவு காற்று மாசு தான் ஏற்படுகிறது.

இந்தநிலையில் நேற்று மராட்டிய மேல்-சபையில் தனியார் வாடகை கார்கள் பெட்ரோல், டீசலில் இயக்கப்படுவதால் மும்பையில் காற்று மாசு அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதற்கு மாநில போக்குவரத்து துறை மந்திரி திவாகர் ராவ்தே பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கட்டாயம்

மும்பை நகர சுற்றுச்சூழலை பேணி காக்கும் வகையில் தனியார் நிறுவன வாடகை கார்களும் சி.என்.ஜி.யில் இயங்கவேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும். இதற்காக தனியார் வாடகை கார்கள் நகர்புற டாக்சி வரையறைக்குள் கொண்டு வரப்படும்.

மீட்டர்களில் முறைகேடு செய்து அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் அழைத்த இடத்திற்கு வர மறுக்கும் டிரைவர்கள் குறித்து பயணிகள் புகார்கள் அளிக்கும் வகையில் டாக்சி, ஆட்டோக்களில் 1800220110 என்ற தொடர்பு எண் எழுதி வைக்கவேண்டும் என்பதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்