வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி தாய்-மகன் கைது

நாமக்கல் அருகே வங்கியில் மேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-16 22:09 GMT
நாமக்கல்,

திருச்செங்கோடு தாலுகா, வையப்பமலையை சேர்ந்தவர் சந்திரா (வயது 40). இவரது மகன் கங்காதரன் (22). என்ஜினீயரிங் பட்டதாரி. இருவரும் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகலூர் கேட்டில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். அவர்கள், கிராமம் தோறும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கிராம கூட்டுறவு வங்கி தொடங்கப்பட உள்ளதாகவும், அதில் மேலாளர் வேலை வாங்கி தருவதாகவும் கூறி பட்டதாரிகளிடம் பணத்தை வசூல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே நாமக்கல் இ.பி. காலனியை சேர்ந்த பழனிசாமி மகன் சிவக்குமார் (33), சந்திரா மற்றும் கங்காதரனிடம் வேலைக்காக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.2 லட்சம் பணத்தை கொடுத்து உள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட சந்திரா பணி நியமன ஆணை ஒன்றையும் வழங்கி உள்ளார். அதன் பின்னர் சிவக்குமார் மல்லூரில் உள்ள அந்த வங்கி வளாகத்திற்கு சென்றுள்ளார். அங்கு வங்கி செயல்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த சிவக்குமார், சந்திராவிடம் பணத்தை திருப்பி கேட்டு உள்ளார். ஆனால் சந்திரா பணம் தராமல் இருந்துள்ளார். இந்த நிலையில் மேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறி சந்திரா மற்றும் அவரது மகன் கங்காதரன் ஆகியோர் தன்னிடம் ரூ.2 லட்சம் பெற்று ஏமாற்றிவிட்டதாக சிவக்குமார், புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்திரா மற்றும் கங்காதரன் ஆகியோரை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், தாய், மகன் இருவரும், வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமானோரிடம் பணத்தை பெற்று, மோசடியில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது.

மேலும் செய்திகள்