மாவட்டம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 51,874 மாணவ-மாணவிகள் எழுதினர்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் 51 ஆயிரத்து 874 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். 1,238 பேர் தேர்வு எழுத வரவில்லை.
வேலூர்,
தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. வேலூர் வருவாய் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. வேலூர் கல்வி மாவட்டத்தில் 27 ஆயிரத்து 24 மாணவ- மாணவிகளும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 26 ஆயிரத்து 90 மாணவ- மாணவிகளும் என மொத்தம் 53 ஆயிரத்து 114 மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதற்காக 219 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வை கண்காணிக்க 221 முதன்மை கண்காணிப்பாளர்கள், 221 துறை அலுவலர்கள், 4,420 அறை கண்காணிப்பாளர்கள், 442 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டிருந்தனர். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.
முதன்முதலாக அரசு பொதுத்தேர்வு எழுதச் சென்றதால் பெரும்பாலான மாணவ- மாணவிகள் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள கோவில்களில் சாமி கும்பிட்டுவிட்டு சென்றனர். பள்ளிக்கு சென்றதும், வீட்டில் படித்த பாடங்களை சக மாணவ, மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
முதல் நாளான நேற்று வேலூர் கல்வி மாவட்டத்தில் 26 ஆயிரத்து 638 மாணவ- மாணவிகள், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 25 ஆயிரத்து 236 மாணவ- மாணவிகள் என மொத்தம் 51 ஆயிரத்து 874 பேர் தேர்வு எழுதினர். வேலூர் மாவட்டத்தில் 386 பேர், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 852 பேர் என மொத்தம் 1,238 மாணவ- மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 2 பேருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை கலெக்டர் ராமன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் பறக்கும்படையினர் தேர்வு மையங்களுக்கு சென்று மாணவ- மாணவிகள் காப்பியடிக்கிறார்களா? என்று கண்காணித்தனர்.