திருப்பத்தூரில் குடிநீர் தொட்டிக்கு கீழ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
திருப்பத்தூரில் குடிநீர் தொட்டிக்கு கீழ் கழிவுநீர் தொட்டி அமைத்து, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் பாதாள சாக்கடை பணிகள் ரூ.105 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக கவுதமபேட்டை பகுதியில் கழிவறை உள்ள இடத்தை இடித்து, அங்கே கழிவுநீர் தொட்டி கட்டி மறுசுழற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு அப்பகுதி மக்கள் கழிவறையை இடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அங்கு கழிவுநீர் தொட்டி கட்டும் திட்டத்தை அதிகாரிகள் நிறுத்தினர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மெயின் ரோட்டில் பூங்காவனத்தம்மன் கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ள 25 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அடியில் கழிவுநீர் தொட்டி அமைத்து, அங்கு சுத்திகரிப்பு நிலையம் கட்ட பள்ளம் தோண்டப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள், ‘இங்கு கழிவுநீர் தொட்டி அமைக்க கூடாது, குடிநீருடன் கழிவுநீர் கலக்க வாய்ப்பு உள்ளது, எதிரில் வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு வேண்டுமானால் கழிவுநீர் தொட்டியும், சுத்திகரிப்பு நிலையத்தையும் அமைக்கலாம்’ என்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நல்லதம்பி எம்.எல்.ஏ., குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் ராம்சேகர், பாதாள சாக்கடை பணி மேலாளர் செல்லமாரிமுத்து ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் மனு எழுதி கொடுத்த பிறகு வேறு இடம் பார்க்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.