‘ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்’ அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்கும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

Update: 2018-03-16 22:15 GMT
கோவை,

கோவை கொடிசியா தொழிற்கண்காட்்சி வளாகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் அனைத்து சங்கங்களின்் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாதனை மலர் வெளியீட்டு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஊரக வளர்ச்சித்துறையின் சாதனை மலரை வெளியிட்டு பேசியதாவது:-

தமிழக அரசு பணியாளர்களின் நலன் காக்கும் அரசாக திகழ்ந்து வருகிறது. அதன்படி, தமிழகத்திலுள்ள 12,224 கிராம ஊராட்சிகளில் ஒவ்வொரு ஊராட்சியிலும், ஒரு ஊராட்சி செயலர் பணிபுரிந்து வருகிறார். ஊராட்சி எழுத்தர், உதவியாளர் பணியிடங்களில், ஊராட்சி செயலர் என ஒரே பணியிடமாக மாற்றப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளருக்கு, ஊதியமும், சிறப்பு படியாக ரூ.500 தர ஊதியம் என்ற ஊதிய விகிதத்தில் ஊதியமும், சிறப்பு படியாக ரூ.500-ம், மருத்துவப்படியாக மாதம் ரூ.100-ம் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஊராட்சி செயலர்களுக்கு பணி விதிகள் வரையறுக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஊராட்சி செயலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்து. ஊராட்சி செயலர்கள் வயது முதிர்வு காரணமாக பணியிலிருந்து ஓய்வு பெறும் போது வழங்கப்படும் தொகையை ரூ.50,000-லிருந்து ரூ.60,000 ஆக உயர்த்தியும், சிறப்பு ஓய்வூதியமாக வழங்கப்பட்ட தொகையை ரூ.700-ஐ ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஊராட்சி செயலர்களுக்கு ஓய்வு பெறும்போது வழங்கப்படும் ஓட்டுமொத்த தொகையான ரூ.60 ஆயிரத்தை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தியும், சிறப்பு ஓய்வூதிய தொகையான பிரதி மாதம் ரூ.1,500-ஐ ரூ.2,000 ஆக உயர்த்தியும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

பெண் ஊராட்சி செயலர்களுக்கான மகப்பேறு விடுப்பு 180 நாட்களாக நீடிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி செயலர்களுக்கு 20 சதவீதம் இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களில் பதவி உயர்வு அளிக்கப்பட்டு 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை 813 ஊராட்சி செயலர்களுக்கு, இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த பதவி உயர்வு ஆண்டுதோறும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி, ஊராட்சி உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் ரூ.2500- 5000 மற்றும் 500-லிருந்து ரூ.7700-24200 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கைகளை தமிழக அரசு, கனிவுடன் பரிசீலிக்கும் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். ஊராட்சி செயலர்களுக்கு தற்போது வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி, இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குதல், ஊராட்சி செயலாளர்களுக்கு கிராம ஊராட்சி அதிகாரி பணியிடம் வழங்குதல், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குனர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன்பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

யார் கட்சி ஆரம்பித்தாலும் அ.தி.மு.க. இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது. 100 ஆண்டு காலத்திற்கு அ.தி.மு.க. இயக்கம் நிலைத்து இருக்கும். டி.டி.வி. தினகரன் கட்சிக்கு சென்றவர்கள் அனைவரும் திரும்பி வந்து விடுவார்கள். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் சூப்பர் ஸ்டார்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்