தொடர் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம்: தடுப்புச்சுவர் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்
தொடர் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால், பாலத்தின் தடுப்புச்சுவர் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடமலைக்குண்டு,
கடமலைக்குண்டு கிராமத்தில் பாலூத்து ஓடையின் குறுக்கே, தேனி பிரதான சாலையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளவில்லை. இதனால் தடுப்புச்சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. சில இடங்களில், தடுப்புச்சுவர் இடிந்து கீழே விழுந்து விட்டது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைக்கருத்தில் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலத்தின் பழைய தடுப்புச்சுவர் அகற்றும் பணி நடந்தது. புதிதாக தடுப்புசுவர் கட்டுவதற்காக ஜல்லிக்கற்கள் மற்றும் மணல் பாலத்தில் குவித்து வைக்கப்பட்டது. இதனால் பாலத்தின் ஒரு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் விபத்தில் சிக்கி காயம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் 3 பேர் விபத்தில் சிக்கியுள்ளனர். வருசநாடு பகுதியை சேர்ந்த சுரேந்தர் (வயது 29) என்பவர் விபத்தில் சிக்கி, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல சில தினங்களுக்கு முன்பு பாலத்தை கடந்து செல்லும் போது தனியார் பள்ளி பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் சென்ற கடமலைக்குண்டு கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (35) என்பவர் படுகாயம் அடைந்தார். இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
எனவே பாலத்தின் தடுப்புச்சுவர் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் கட்டிட பணிக்காக பாலத்தில் கொட்டப்பட்ட மணல்- கற்களை அகற்றி, வேறு இடத்தில் குவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.