முதல்-மந்திரி சித்தராமையாவுடன் மடாதிபதிகள் சந்திப்பு லிங்காயத்-வீரசைவ சமூகத்தை பிரிக்க வேண்டாம் என கோரிக்கை

முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்து பேசிய மடாதிபதிகள், லிங்காயத்-வீரசைவ சமூகத்தை பிரிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர்.

Update: 2018-03-15 22:30 GMT
பெங்களூரு,

முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்து பேசிய மடாதிபதிகள், லிங்காயத்-வீரசைவ சமூகத்தை பிரிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர்.

நிபுணர் குழு பரிந்துரை

லிங்காயத்-வீரசைவ சமூகம் ஒன்றே என்று இதுநாள் வரை இருந்து வருகிறது. இந்த நிலையில் லிங்காயத் பிரிவை சேர்ந்த மடாதிபதிகள் மற்றும் மந்திரிகள், லிங்காயத் மற்றும் வீரசைவ சமூகங்கள் வெவ்வேறானவை என்றும், லிங்காயத் சமூகத்திற்கும், இந்து மதத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் வலியுறுத்தினர். அதனால் லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கோரி சித்தராமையாவிடம் மனு கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆய்வு செய்து விவரங்களை சேகரித்து அறிக்கையை அரசிடம் வழங்கியது. அதில் லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. இதுபற்றி மந்திரிசபை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்தது. இதற்காக நேற்று முன்தினம் மந்திரிசபை கூட்டம் கூட்டப்பட்டது. கடைசி நேரத்தில் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

சித்தராமையாவிடம் மனு

இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையாவை பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று லிங்காயத்-வீரசைவ சமூகத்தை சேர்ந்த மடாதிபதிகள் சந்தித்து பேசினர். அப்போது, லிங்காயத்-வீரசைவ சமூகத்தை எக்காரணம் கொண்டும் பிரிக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று கோரி சித்தராமையாவிடம் அவர்கள் மனு கொடுத்தனர். மேலும் இது தொடர்பாக நிபுணர் குழு வழங்கிய அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். சித்தராமையாவை சந்தித்து மனு கொடுத்த பிறகு மடாதிபதிகளில் ஒருவரான திங்காலேஸ்வரா சுவாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

“லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்க பரிந்துரை செய்துள்ள நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரிக்க வேண்டும். தேவைப்பட்டால் லிங்காயத்-வீரசைவ சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் பெறுவது குறித்து இருதரப்பினரையும் உள்ளடக்கி ஒரு குழுவை அரசு அமைக்க வேண்டும். மதத்தின் பெயரில் எழுந்துள்ள இந்த குழப்பம் எங்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழப்பத்திற்கு தீர்வு காண வேண்டும்.

நம்பிக்கை உள்ளது

சித்தராமையா பரிவான இதயத்தை கொண்டவர். நல்லவர். அறிவாளி. அவரை சிலர் திசை திருப்பி இருக்கிறார்கள். அவர் இந்த சமூகத்தை பிரிக்கும் முயற்சியில் இறங்கமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவேளை எங்கள் சமூகத்தை பிரித்தால் அதற்கு எதிராக நாங்கள் போராடுவோம்.”

இவ்வாறு திங்காலேஸ்வரா சுவாமி கூறினார்.

மேலும் செய்திகள்