திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சாலை பாதுகாப்பு படை விழிப்புணர்வு நாள் விழா போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் பங்கேற்பு

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடந்த சாலை பாதுகாப்பு படை விழிப்புணர்வு நாள் விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் கலந்து கொண்டார்.

Update: 2018-03-15 21:30 GMT
திருச்செந்தூர்,

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடந்த சாலை பாதுகாப்பு படை விழிப்புணர்வு நாள் விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் கலந்து கொண்டார்.

சாலை பாதுகாப்பு படை

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சாலை பாதுகாப்பு படை விழிப்புணர்வு நாள் விழா நேற்று காலையில் நடந்தது. கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம் தலைமை தாங்கி, வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் கோபாலகிருஷ்ணன், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு, தேசிய விருது பெற்ற மாவட்ட தலைமை போக்குவரத்து காப்பாளர் ஜட்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

விபத்துகள் அதிகரிப்பு

கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 360 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 1,280 பேர் படுகாயம் அடைந்து, கை, கால் போன்ற உடல் உறுப்புகளை இழந்து உள்ளனர். எய்ட்ஸ், போலியோ, பெரியம்மை, காலரா போன்ற நோய்கள் மேலும் பரவாமல் இருக்கும் வகையில், அரசு சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளது. ஆனால் நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த இந்த காலத்திலும், ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனை தரக்கூடியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக தினமும் ஒரு சாலை விபத்தில் ஒருவர் உயிரிழக்கிறார். 5 முதல் 10 பேர் வரையிலும் படுகாயம் அடைகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் சிலர் விடுமுறையை கொண்டாடுவதற்காக மது குடித்து விட்டு, வாகனங்களை இயக்குவதால் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து விடுகிறது. எந்த ஒரு பயணமாக வெளியே சென்றாலும், நிச்சயமாக திரும்பி வந்து விடலாம் என்ற உறுதிப்பாடு இல்லை. சாலை விபத்துகளில் எனது நெருங்கிய 3 நண்பர்களை இழந்து உள்ளேன்.

விபத்து இல்லாத சமுதாயத்தை படைக்க...


ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்று, சாலை விதிகளை மீறினால், தண்டனை மற்றும் அபராதம் கிடைக்கும் என்பதை உணர்த்துவது மட்டுமே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அல்ல. சாலை விதிகளை மதித்து நடந்தால் கிடைக்கும் நன்மைகளை புரிய வைப்பதே உண்மையான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆகும். குடும்ப தலைவன், விபத்தில் சிக்கினால் அந்த குடும்பமானது மருத்துவத்துக்கே அதிக செலவு செய்யும்போது தவிப்புக்குள்ளாகும். விபத்தில் குடும்ப தலைவன் இறந்தால், அந்த குடும்பமானது நிர்க்கதியாகி விடும்.

மாணவர்கள் தங்களுக்குள் குழுக்களை ஏற்படுத்தி கொண்டு, ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் சென்று, சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களை கேட்டறிந்து, அந்த குடும்பத்தினருக்கு சென்று ஆறுதலும், உதவியும் செய்ய வேண்டும். இதன்மூலம் சாலை விபத்தால் அந்த குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பை மற்றவர்கள் உணரும் வகையில் சமுதாயத்துக்கு தெரியப்படுத்துங்கள். இங்குள்ள ஒவ்வொருவரும் சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்போம் என்று விழிப்புணர்வு அடைவதோடு, அதனை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். சாலை விதிகளை கடைபிடித்து, விபத்து இல்லாத சமுதாயத்தை படைக்க உறுதிமொழி ஏற்போம்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் கூறினார்.

பின்னர் அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு படையில் அதிக மாணவர்களை சேர்த்ததற்காக காவல் துறை சார்பில், ஆதித்தனார் கல்லூரிக்கு கேடயம் பரிசு வழங்கினார். அதனை கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம் பெற்றுக் கொண்டார்.

துண்டுபிரசுரம் வினியோகம்


விழாவில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பெவின்சன் பேரின்பராஜ், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன், போக்குவரத்து சப்–இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் ஆதித்தனார் கல்லூரி மாணவ–மாணவிகள், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி மாணவிகள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி மாணவ–மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி சாலை பாதுகாப்பு படை இயக்குனர் ராஜேஷ் நன்றி கூறினார்.

பின்னர் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் மாணவ–மாணவிகள், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்தனர். மேலும் சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு கோ‌ஷங்களை எழுப்பி, பிரசாரம் செய்தனர்.

மேலும் செய்திகள்