2 ஆயிரத்து 498 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து 2 ஆயிரத்து 498 ஏக்கர் நிலம் பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து விடப் பட்டது.
டி.என்.பாளையம்,
கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனப்பகுதியில் 3 மலைகளுக்கு நடுவே குண்டேரிப்பள்ளம் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 42 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 41.03 அடியாக உள்ளது.
இந்த அணைக்கு குன்றி, விளாங்கோம்பை, கெம்பனூர், மல்லியம்மன் துர்க்கம் கிழக்கு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் நீர்வரத்தாக உள்ளது. இந்த நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டி அணை பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் நேற்று காலை அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜ் கலந்து கொண்டு அணையின் மதகை திருகி தண்ணீரை திறந்து விட்டார். சீறிப்பாய்ந்து சென்ற தண்ணீர் மீது அங்கிருந்தவர்கள் மலர் தூவியும், பால் ஊற்றியும் வரவேற்றனர். நிகழ்ச்சியில் கோபி தாசில்தார் பூபதி, பவானிசாகர் அணை கோட்ட செயற்பொறியாளர் திருச்செந்தில் வேலன், உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், குண்டேரிபள்ளம் அணை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘குண்டேரிப்பள்ளம் அணையின் மூலம் கொங்கர்பாளையம், கவுண்டம்பாளையம், வாணிப்புத்தூர், அரக்கன்கோட்டை, புஞ்சைதுறையம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில் வலது கரை வாய்க்கால் மூலம் 879 ஏக்கரும், இடதுகரை வாய்க்கால் மூலம் 1,619 ஏக்கரும் என மொத்தம் 2 ஆயிரத்து 498 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகிறது. வலது கரையில் 9 கன அடியும், இடது கரையில் 19 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பினை பொறுத்து முறை வைத்து வருகிற மே மாதம் 20-ந் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும். எனவே விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என்றனர்.