நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி போலீஸ் கமி‌ஷனர் கபில்குமார் சரத்கர் தொடங்கி வைத்தார்

நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சியை நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் (கூடுதல் பொறுப்பு) கபில்குமார் சரத்கர் தொடங்கி வைத்தார்.

Update: 2018-03-15 21:30 GMT
நெல்லை,

நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சியை நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் (கூடுதல் பொறுப்பு) கபில்குமார் சரத்கர் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு கண்காட்சி

நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் மாநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அதன் தொடக்க விழா நடந்தது. நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் (கூடுதல் பொறுப்பு) கபில்குமார் சரத்கர் கலந்து கொண்டு, கண்காட்சியை திறந்து வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

விபத்து இல்லாத மாநகரத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சி 2 மாதம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

விபத்துகளை குறைக்க நடவடிக்கை

சாலை விபத்தில் 2016–ம் ஆண்டு 110 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு 86 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு 50 சதவீதம் விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குற்றங்கள் நடக்காமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிரந்தரமாக தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள், நெல்லை மாநகர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சங்கிலி பறிக்கும் திருடர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

13 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாநகர பகுதியில் நடந்த பல சம்பவங்களில் கொள்ளையர்களை பிடித்து. நகைகளை மீட்டு இருக்கிறோம். பழைய குற்றவாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது. அவர்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இதுவரை நெல்லை மாநகர பகுதியில் 13 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு போலீஸ் கமி‌ஷனர் கபில்குமார் சரத்கர் கூறினார்.

கலை நிகழ்ச்சிகள்

தொடர்ந்து ம.தி.தா.இந்து கல்லூரி மாணவ–மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும், ஹெல்மெட் அணியாமலும், விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் குறித்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. கண்காட்சியையொட்டி பொதுமக்களுக்கு பொது மருத்துவம், கண்பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சிகளை நயினார் முகமது தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் நெல்லை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர்கள் சுகுணாசிங், பெரோஸ்கான் அப்துல்லா, நெல்லை டவுன் உதவி கமி‌ஷனர் மாரிமுத்து, குற்ற ஆவண காப்பக உதவி கமி‌ஷனர் (பொறுப்பு) சுதந்திரராஜன், போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சாதுசிதம்பரம், ஆபிரகாம்பால்துரை, சப்–இன்ஸ்பெக்டர்கள் பாண்டி, நாராயணராஜா, செல்லத்துரை, கண்ணதாசன், கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் விக்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்