கோட்டக்குப்பத்தில் ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு பேரணி
கோட்டக்குப்பத்தில் ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் உட்கோட்ட காவல்துறை சார்பில் சாலை விபத்தை தடுக்கும் வகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிந்து செல்ல வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் உட்கோட்ட போலீசாரும் கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டு இருசக்கர வாகனங்களில் ‘ஹெல்மெட்’ அணிந்தவாறு முக்கிய வீதிகள் வழியாக கோட்டக்குப்பம் ரவுண்டானா வரை சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதனை தொடர்ந்து கோட்டக்குப்பம் ரஹ்மத்நகர், நாட்டாண்மைகாரர் தெரு, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் இயக்கி வைத்து கேமராக்கள் செயல்படும் விதம் குறித்து சி.சி. டி.வி. மூலம் கண்காணித்தார். இந்த நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் மைக்கேல்இருதயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.