விழுப்புரத்தில் 8 விவசாயிகள் மட்டுமே கலந்து கொண்ட குறைகேட்பு கூட்டம்

விழுப்புரத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் 8 விவசாயிகள் மட்டுமே கலந்து கொண்டனர். இது பற்றி பலருக்கு தகவல் தெரிவிக்காமல் பெயரளவிற்கு குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

Update: 2018-03-15 22:00 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று மாலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் சரஸ்வதி தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர். இதில் கிருஷ்ணாபுரம் ஏரியை தூர்வார வேண்டும், சிறுவந்தாட்டில் உள்ள கால்நடை மருத்துவமனையை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், சொர்ணாவூர் மலட்டாற்றுக்கு தண்ணீர் வரும் நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும், சொட்டுநீர் பாசன கருவிகளை மானியத்தில் உடனுக்குடன் வழங்க வேண்டும், ஓட்டல்களில் பார்சல் மற்றும் உணவு பரிமாற பாலித்தீன் பையை பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது, எனவே அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக வாழை இலையை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை கேட்டறிந்த கோட்டாட்சியர் சரஸ்வதி, விவசாயிகளின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார். இக்கூட்டத்தில் தாசில்தார்கள் சுந்தர்ராஜன், பிரபாகரன், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷ், மண்டல துணை தாசில்தார்கள் அய்யனார், ராஜ்குமார், ஏழுமலை உள்பட அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டம் நடப்பது பற்றி முறையாக தகவல் தெரிவிக்காததால் 3 தாலுகாக்களை சேர்ந்த வெறும் 8 விவசாயிகளே பங்கேற்றனர். 25-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் கோட்டத்தில் 3 தாலுகாக்கள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாதந்தோறும் நடத்த வேண்டும். ஆனால் விழுப்புரம் கோட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுவதில்லை.

3 மாதம் அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகிறது. அதுவும் வெறும் பெயரளவிற்கு நடத்தப்படுகிறது. கூட்டம் நடத்துவது தொடர்பாக முன்கூட்டியே விவசாயிகளுக்கு தெரிய படுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு விவசாயிகளுக்கு யாரும் தெரியப்படுத்துவதில்லை. இதற்கு சான்றுதான் இன்று நடந்த விவசாயிகள் குறை கேட்பு கூட்டம். இந்த கூட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். ஆனால் 8 விவசாயிகள் மட்டுமே பங்கேற்றுள்ளோம். இவ்வாறு கூட்டம் நடத்துவதால் பிரயோஜனம் இல்லை. பெயரளவிற்கு குறைகேட்பு கூட்டம் நடத்துவதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். இனி வரும் காலங்களில் விவசாயிகளுக்கும், விவசாய சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் முறையாக தகவல் தெரிவித்து குறைகேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

மேலும் செய்திகள்