நகை பறிப்பு, வாகன திருட்டில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நகை பறிப்பு, வாகன திருட்டில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் அருகேயுள்ள நல்லாம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்ற குட்டிமணி (வயது 23), வேடப்பட்டியை சேர்ந்த ராஜாமுகமது (22), முனீஸ்வரன் (22), நத்தம் சாலை நம்பிக்கோட்டையை சேர்ந்த பிரவின்குமார் என்று சீனு (23) ஆகியோர் மீது நகை பறிப்பு வழக்குகள் பல நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் அவர்கள் 4 பேரும், கடந்த மாதம் நத்தம் சாலை மற்றும் வாழைக்காய்பட்டி பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
வாகன திருட்டு
அதேபோல் ரெண்டலப்பாறையை சேர்ந்தவர் ஐரின்குரூஸ் (28). இவர் மீது இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் பல உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு நல்லாம்பட்டி பகுதியில் ஒருவரிடம் வாகனம் மற்றும் பணத்தை பறித்து சென்றதாக தெரிகிறது. இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஐரின்குரூசை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே அந்த 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டார். அதன்பேரில் திண்டுக்கல் சிறையில் இருந்த 5 பேரையும், தாலுகா போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.