கல்பட்டிசத்திரம்-தாமரைப்பாடி இடையே 120 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்
கல்பட்டிசத்திரம்-தாமரைப்பாடி இடையே இரண்டாவது ரெயில் பாதையில் 120 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.
வடமதுரை,
திண்டுக்கல்-விழுப்புரம் இடையே 281 கி.மீ. தூரத்திற்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி 1,200 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கியது. இந்தப் பணியை ரெயில்வே துறையின் முக்கிய அங்கமான ரெயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் என்ற ஆர்.வி.என்.எல். நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்த பணி திருச்சியில் இருந்து கல்பட்டிசத்திரம் வரையிலும், திண்டுக்கல்லில் இருந்து தாமரைப்பாடி வரையிலும் முடிக்கப்பட்டுவிட்டது. எஞ்சியிருந்த கல்பட்டிசத்திரம்-தாமரைப்பாடி இடையே 25 கிலோமீட்டர் தூர பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பணி முழுவீச்சில் நடைபெற்று வந்தது.
வடமதுரை மற்றும் அய்யலூர் ரெயில் நிலையங்களில் நடைமேடைகள், மேற்கூரை, சிக்னல் மற்றும் மின்பாதை அமைக்கும் பணிகள் முடிவுற்றன. அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி தங்கம்மாபட்டியில் இருந்து தாமரைப்பாடி வரை இரண்டாவது பாதையில் மின்சார ரெயில் என்ஜினை 140 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், துணை ஆணையர்கள் சீனிவாஸ், மணி, மதுரை மண்டல ரெயில்வே மேலாளர் நீனு இத்தியாரா, கட்டுமான தலைமை நிர்வாக அதிகாரி சுதாகர்ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் தாமரைப்பாடி முதல் கல்பட்டிசத்திரம் வரை உள்ள ரெயில் தண்டவாளங்களில் 7 டிராலிகளில் சென்று ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து, வடமதுரையில் ரூ.80 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நவீன ரெயில் நிலைய கட்டிடத்தை இருப்புப்பாதை தலைமை பொறியாளர் எத்திராஜலு திறந்து வைத்தார்.
அன்று இரவு என்ஜின் கோளாறு காரணமாக சோதனை ஓட்டம் கைவிடப்பட்டு, நேற்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 10 மணியளவில் கல்பட்டிசத்திரம் முதல் தாமரைப்பாடி வரை மின்சார ரெயில் என்ஜின் 3 பெட்டிகளுடன் 120 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்த பின்னர் ரெயில்வே பாதுகாப்பு துறையினர் சார்பாக சான்றிதழ் வழங்கப்படும். அதன் பின்னர் விரைவில் இரண்டாவது பாதையில் ரெயில்கள் இயக்கப்படும், என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.