செய்யாறு பகுதியில் மணல் கடத்தலை தடுக்க சென்ற கோட்டாட்சியர் கண்ணெதிரே உதவியாளருக்கு சாட்டையால் அடி 4 மாட்டு வண்டிக்காரர்கள் கைது; ஒருவர் தப்பி ஓட்டம்
மணல் கடத்தலை தடுப்பதற்காக ரோந்து சென்றபோது கோட்டாட்சியர் கண்ணெதிரிலேயே அவருடன் சென்ற உதவியாளாருக்கு சாட்டையால் தாக்கப்பட்டார்.
ஆரணி,
செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) அரிதாஸ், தாசில்தார் மகேந்திரமணி ஆகியோர் மணல் கடத்துவோரை பிடிப்பதற்காக தனியார் வாகனத்தில் ரோந்து சென்றனர். அவர்களுடன் கோட்டாட்சியர் அலுவலக உதவியாளர் அச்சுதானந்தனும் (டபேதார்) சாதாரண உடையில் சென்றார். அவர்கள் வாழப்பந்தல், திருமணி, முனுகப்பட்டு, மேல்சீசமங்கலம் வரை சென்றனர்.
மேல்சீசமங்கலம் பகுதியில் சென்றபோது அதே பகுதியை சேர்ந்த ரவி, செல்வரசு, வெங்கடேசன் மற்றும் முனிசாமி ஆகியோர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தனர். மாட்டுவண்டிகளை அதிகாரிகள் மடக்கியபோது மாட்டு வண்டியில் வந்த ரவியின் மருமகன் தணிகாசலம் என்பவர் மடக்கியது அதிகாரிகள் என்று தெரியாமல் உதவியாளர் அச்சுதானந்தத்தை ஆபாசமாக பேசி கையில் வைத்திருந்த மாடுகளை விரட்டும் சாட்டை கம்பால் தாக்கினார்.
இதில் காயமடைந்த அச்சுதானந்தம் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனையடுத்து 4 மாட்டு வண்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆரணி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
மணல் கடத்தியதாகவும் உதவியாளரை தாக்கியதாகவும் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் செய்யாறு தாசில்தார் மகேந்திரமணி புகார் அளித்தார். இதனிடையே உதவியாளரை தாக்கிய தணிகாசலம் தப்பி ஓடிவிட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவரும் போலீசார், மணல் திருட்டில் ஈடுபட்ட மாட்டுவண்டிக்காரர்கள் ரவி, செல்வரசு, வெங்கடேசன், முனிசாமி ஆகிய 4 பேரையும் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா கைது செய்தார்.
கோட்டாட்சியர் கண்ணெதிரிலேயே அவரது உதவியாளர், மாட்டு வண்டிக்காரரால் சாட்டை மூலம் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் ஆரணி தாலுகாவிலுள்ள ஆற்றுப்படுகைகளான தச்சூர், விண்ணமங்கலம், மோட்டூர், எஸ்.வி.நகரம், லாடப்பாடி, வாழப்பந்தல், மேல்சீசமங்கலம், ரகுநாதபுரம், குண்ணத்தூர், காமக்கூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தொடர்ந்து இரவு பகல் பாராமல் மாட்டுவண்டிகளில் மணல் கடத்தப்பட்டு கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வந்தது.
இது குறித்த புகாரின்பேரில் ஆரணி தாசில்தார் ஆ.சுப்பிரமணி, தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மண்டல துணை தாசில்தார் ஆகியோர் தனி வாகனங்களில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். தச்சூர் அருகே செல்லும்போது ஒரு டிராக்டரில் மணல் கடத்தி வரப்பட்டது.
தனி வாகனங்களில் வருபவர்கள் அதிகாரிகள் தான் என்பதை உணர்ந்த டிராக்டர் டிரைவர் அதனை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு தப்பி விட்டார். இதனையடுத்து டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு ஆரணி தாலுகா அலுவலகம் கொண்டு வரப்பட்டது. மேலும் தச்சூர், மோட்டூர் கிராமத்தில் சுமார் 10 யூனிட் மணல் குவியலாக குவிக்கப்பட்டிருப்பதை கண்டு அதனை உடனடியாக மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கா.கிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.