திரு.வி.க.நகர்-வியாசர்பாடி-வடபழனியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திரு.வி.க. நகர், வியாசர்பாடி மற்றும் வடபழனி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
திரு.வி.க. நகர்,
சென்னை மாநகராட்சி பகுதியில் சாலையோரம் நடைபாதைகளை ஆக்கிரமித்து உள்ள கடைகள் மற்றும் சாலையை ஆக்கிரமித்து கடைகள் முன்பு உள்ள மேற்கூரை, பெயர் பலகை உள்ளிட்டவைகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றும் பணியில் மாநகராட்சி மண்டல அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று காலை திரு.வி.க. நகர் மண்டல அதிகாரி அருணா உத்தரவின்பேரில் செயற்பொறியாளர் செந்தில்நாதன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் சரோஜா, உதவி பொறியாளர்கள் சரஸ்வதி, சிவப்பிரியா, கோபிநாத் உள்பட 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரு.வி.க. நகர் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதையொட்டி போலீஸ் உதவி கமிஷனர் சரவணகுமார், இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
வாக்குவாதம்
ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடந்தது.
இதையடுத்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில துணைத்தலைவர் தேவராஜ் தலைமையில் வியாபாரிகள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபடமுயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், 4 பேரை கைது செய்தனர்.
தள்ளுமுள்ளு
வியாபாரிகளின் எதிர்ப்பை மீறி மதியம் வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன், 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுடன் அங்கு வந்து அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வியாபாரிகள் அனைவரும் அதிகாரிகளை சுற்றி வளைத்து நின்று வாக்குவாதம் செய்ததால், அவர்களை போலீசார் விலக்கிவிட்டனர். இதனால் வியாபாரிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதிகாரிகள் திரும்பிச்சென்றனர்
அப்போது மண்டல செயற்பொறியாளர் செந்தில்நாதன் மற்றும் உதவி செயற்பொறியாளர் உள்பட மாநகராட்சி ஊழியர்களை வியாபாரிகள் தகாத வார்த்தையில் பேசி திட்டியதுடன், அதிகாரிகளை தாக்கவும் முயன்றனர்.
இதனால் அதிகாரிகள், வியாபாரிகளிடம் இருந்து தப்பித்து போலீஸ் உதவியுடன் காரில் ஏறி வேகமாக அங்கிருந்து திரும்பிச்சென்று விட்டனர். அதை தொடர்ந்து வியாபாரிகள் கேட்டு கொண்டதன்பேரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, கைதான 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் வெள்ளையன் கூறும்போது, “இந்த பகுதியில் 42 பேர் நடைபாதை ஓரமாக கடைவைத்து பிழைப்பு நடத்தி வந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக அதிகாரிகள் முன்னறிவிப்பு கொடுக்கவில்லை. இது தொடர்ந்தால் வியாபாரிகள் போராட்டம் பெரியஅளவில் நடைபெறும். அத்துமீறி நடந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் அரசு விசாரணை நடத்தவேண்டும். பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்” என்றார்.
வியாசர்பாடி
இதேபோல் தண்டையார்பேட்டை மண்டல அதிகாரி அனிதா உத்தரவின்பேரில் செயற்பொறியாளர் சுந்தரேசன், உதவி செயற்பொறியாளர் முருகவேல், உதவி பொறியாளர்கள் தென்னரசு, அருண் ஆகியோர் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் சுந்தர்ராஜ், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட வியாசர்பாடி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி நடைபாதையை ஆக்கிரமித்து இருந்த 200-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் 80-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு முன்புறம் சாலையை ஆக்கிரமித்து இருந்த மேற்கூரைகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
அப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை தடுத்து நிறுத்திய வடசென்னை வியாபாரிகள் சங்கத்தினர், தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்வதாக தெரிவித்தனர்.
இதையடுத்து 2 நாட்கள் காலஅவகாசம் அளித்த அதிகாரிகள், அதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறும் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
வடபழனி
வளசரவாக்கம் மண்டல பொறியாளர் மணிமாறன் மற்றும் அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் சென்னை வடபழனி பஸ் நிலையம் அருகே சாலையோரம் கடைகள் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர். அவர்களை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். பின்னர் அங்கிருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டன.