காங்கிரஸ் ஆட்சியை ஆதரிப்பதை தொடர்ந்தால் புதுவையில் தி.மு.க. காணாமல் போய்விடும், அன்பழகன் எம்.எல்.ஏ. ஆரூடம்

காங்கிரஸ் ஆட்சியை ஆதரிப்பதை தொடர்ந்து புதுவையில் தி.மு.க. காணாமல் போய் விடும் என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2018-03-14 23:15 GMT
புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் நிதியுதவி, கடன் பெறுவதற்கான அனுமதி ஆகியவற்றை மத்திய அரசு தரும் நிலையில், மாநிலத்தின் வருவாயை சேர்த்து முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யாமல் முன் அனுமதி என்ற பெயரில் 3 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வது கண்டனத்துக்குரியது. என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த அப்போதைய முதல் அமைச்சர் ரங்கசாமியை இதே நாராயணசாமி தான் கடுமையாக விமர்சித்தார்.

அப்படிப்பட்ட இவர் தற்போது முதல்- அமைச்சராகி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வது கேலிக்குரியதாகும். இது மக்களை ஏமாற்றும் செயல். முழு பட்ஜெட் போட முடியாத தோல்வியை நாராயணசாமி ஒப்புக் கொள்ள வேண்டும்.

தமிழக சட்டசபையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். ஆனால் இங்குள்ள முதல்- அமைச்சர் நாராயணசாமி இதுபற்றி யோசிக்காமல் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி வீண் விளம்பரத்துக்காக 2 ஆண்டுகளை வீணாக்கியுள்ளார். எதிர்க் கட்சி தலைவரான ரங்கசாமி கவர்னர் கிரண்பெடியை சந்தித்ததை தொடர்ந்து மிக்சி, கிரைண்டர் வாங்கியதில் ஊழல் என்றார். ஆனால் அதுகுறித்து விசாரிக்கப்படுகிறதா? என்பதை தெரிவிக்கவில்லை. இதுபோல் எதிர்க்கட்சிகளை மிரட்டி நாராயணசாமி காலம் கடத்தி வருகிறார்.

கூட்டுறவு வங்கிகளில் நடந்த முறைகேடு தொடர்பாக வங்கிக்கு சென்று கவர்னர் கிரண்பெடி ஆய்வு நடத்தி உள்ளார். கல்லூரிக்கே செல்லாத 10-க்கும் மேற்பட்டவர்கள் இங்கு மேலாளர்களாக உள்ளனர். சிலர் 10-வது படித்துள்ளதாக கூறி போலி சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதுதொடர்பாக தலைமை செயலாளர் விசாரிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இதில் உண்மைகள் வெளிவர வாய்ப்புகள் குறைவாக உள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

புதுவை கதர் வாரியத்திலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஆனால் இதன் மூலம் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. கதர்வாரியம், பாசிக், பாப்ஸ்கோ போன்ற நிறுவனங்களுக்கும் சென்று கவர்னர் ஆய்வு நடத்த வேண்டும்.

புதுவை சட்டசபையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தீர்மானம் இயற்ற சபாநாயகரிடம் அ.தி.மு.க. சார்பில் கடிதம் கொடுக்க உள்ளோம் முதல்-அமைச்சர் உள்பட அனைத்து அமைச்சர்களும் நிர்வாக ரீதியாக தோல்வியடைந்துள்ளனர்.

ஆளும் காங்கிரஸ் அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதால் புதுவையில் தி.மு.க. சுருங்கி வருகிறது. அரசுக்கான ஆதரவை வாபஸ்பெற்றால் புதுவையில் தி.மு.க. இருக்கும். தொடர்ந்து அரசை ஆதரித்தால் காணாமல் போய்விடும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்