கடலூரில் சாராயம் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
கடலூரில் சாராயம் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடலூர்,
கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை தலைமையில் போலீசார் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 250 லிட்டர் சாராயம் கடத்தி வந்த கடலூர் முதுநகர் சுண்ணாம்புகார தெருவை சேர்ந்த ஆறுமுகம்(வயது 37) என்பவரை போலீசார் கைது செய்து கடலூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது கடலூர், சிதம்பரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையங்கள் மற்றும் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் சாராயம் கடத்தி வந்ததாக 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் ஆறுமுகம் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதை தடுக்கும் வகையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரைசெய்தார். இதை ஏற்று கலெக்டர் தண்டபாணி உத்தரவின் பேரில் கிளை சிறையில் இருந்த ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான நகலை போலீசார் வழங்கினர். பின்னர், ஆறுமுகம் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.