தூத்துக்குடியில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை: 7 வீடுகள் இடிந்து விழுந்தன ரெயில் தண்டவாளம்-உப்பளங்கள் நீரில் மூழ்கின

தூத்துக்குடியில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் 7 வீடுகள் இடிந்து விழுந்தன. ரெயில் தண்டவாளம்-உப்பளங்கள் நீரில் மூழ்கின.

Update: 2018-03-14 21:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் 7 வீடுகள் இடிந்து விழுந்தன. ரெயில் தண்டவாளம்-உப்பளங்கள் நீரில் மூழ்கின.

காற்றழுத்த தாழ்வுநிலை

கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் அனைத்தும் கடந்த 4 நாட்களாக கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய் தது. இந்த மழை விடிய, விடிய கொட்டித்தீர்த்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. நேற்று அதிகாலையில் மணிக்கு சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டு உள்ளது.

200 மில்லி மீட்டர் மழை

தூத்துக்குடியில் வரலாறு காணாத வகையில் பலத்த மழை பெய்தது. நேற்று ஒரே நாளில் 200.8 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இதனால் தூத்துக்குடி திரேஸ்புரம், மாதவன்நாயர் காலனி, வி.இ.ரோடு, பழைய மாநகராட்சி பகுதிகள் அனைத்தும் மழைநீரில் மூழ்கின. திரேஸ்புரம் முத்தரையர் காலனி பகுதிகளில் சுமார் 40 வீடுகளுக் குள் மழைநீர் புகுந்தது.இதனால் மக்கள் வீடுகளில் இருந்தபடி மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த பலத்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் 7 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன.

பயிர்கள் சேதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 633 எக்டர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில் பல இடங்களில் நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில் பெய்த பலத்த மழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.

இதேபோன்று மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் உள்ளன. இந்த உப்பளங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதன் காரணமாக உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏற்கனவே இருப்பு வைக்கப்பட்டு உள்ள உப்பு விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் தூத்துக்குடியில் உள்ள ரெயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால் ரெயில்கள் செல்ல முடியாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டது.

மழை நிலவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை நிலவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

தூத்துக்குடி - 200.8

காயல்பட்டினம் - 142

ஸ்ரீவைகுண்டம் - 95

திருச்செந்தூர் - 82

வைப்பார் - 56

கீழஅரசடி - 54

ஓட்டப்பிடாரம் - 52

எட்டயபுரம் - 49

கயத்தாறு - 48

கடம்பூர் - 45

மணியாச்சி - 40

விளாத்திகுளம் - 40

சூரங்குடி - 38

சாத்தான்குளம் - 36

வேடநத்தம் - 32

கோவில்பட்டி - 15

குலசேகரன்பட்டினம்- 14

காடல்குடி - 12

கழுகுமலை - 10

மேலும் செய்திகள்