கூடலூர் மலைப்பாதையில் பொக்லைன் எந்திரம் கவிழ்ந்தது: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கூடலூர் மலைப்பாதையில் பொக்லைன் எந்திரம் கவிழ்ந்தது. இதனால் அந்த வழியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-03-14 22:15 GMT
கூடலூர்,

கூடலூரில் இருந்து ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. மேலும் மலைப்பாதை என்பதால் ஆபத்தான வளைவுகள் அதிகம் உள்ளது. கேரளா- கர்நாடகா மட்டுமின்றி வடமாநில சுற்றுலா பயணிகள் தினமும் கூடலூர் மலைப்பாதை வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். இதனால் வாகனங்கள் அதிகளவு இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மலைப்பாதையில் வாகனங்களை இயக்கும் முறைகள் குறித்து சமவெளி பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் பின்பற்றுவது இல்லை.

இதனால் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோவையில் இருந்து ஊட்டி வழியாக கூடலூருக்கு நேற்று பொக்லைன் எந்திரம் வந்து கொண்டு இருந்தது. அதை கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த டிரைவர் ஓட்டி வந்தார். நடுவட்டம் அருகே தவளமலை காட்சிமுனை பகுதியில் வந்த போது காலை 9.30 மணிக்கு திடீரென பொக்லைன் எந்திரம் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது.

அப்போது எந்திரத்தில் இருந்த ஆயில் சாலையில் வழிந்தோடியது. மேலும் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நடுவட்டம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாமணி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொக்லைன் எந்திரத்தை சிறிது தூரம் அகற்றினால் வாகனங்கள் செல்ல இடம் கிடைக்குமா? என போலீசார் ஆய்வு நடத்தினர். ஆனால் பொக்லைன் எந்திரத்தை அகற்ற முடிய வில்லை. இதைத்தொடர்ந்து கூடலூரில் இருந்து கிரேன் கொண்டு வரப்பட்டது. பின்னர் பகல் 12.30 மணிக்கு பொக்லைன் எந்திரத்தை கிரேன் உதவியுடன் போலீசார் அகற்றினர். அதன் பின்னர் வாகன போக்குவரத்து சீரானது. இந்த விபத்தால் கேரளா- கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் மைசூர், பெங்களூரு செல்ல வேண்டிய பயணிகள், பொதுமக்கள் சாலையில் நின்று தவிக்க வேண்டிய நிலை காணப்பட்டது. மேலும் அனைத்து தரப்பினரும் கடும் அவதி அடைந்தனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, கூடலூர் பகுதியில் மழைக்காலத்தில் அடிக்கடி மரங்கள் மற்றும் பாறைகள் உருண்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் உடனடி நடவடிக்கை எடுக்க போலீசார் அல்லது தீயணைப்பு துறையினருக்கு கிரேன் எந்திரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நேரத்தில் தனியார் எந்திரத்தை கொண்டு வருவதற்குள் காலவிரயம் ஏற்படுகிறது. எனவே அதற்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றனர். 

மேலும் செய்திகள்