தேங்காய் வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.5 லட்சம் திருடிய 3 வாலிபர்கள் கைது

தேங்காய் வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.5 லட்சம் திருடிய திருவெறும்பூரை சேர்ந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-14 23:00 GMT
அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மஞ்சக்கரையை சேர்ந்தவர் ரவி (வயது 48). தேங்காய் வியாபாரி. இவர் கடந்த மாதம் 12-ந்தேதி அறந்தாங்கியில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் ஆண்டாக்கோட்டை வழியாக ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

ரெத்தினகோட்டை அருகே சென்றபோது, பின்னால் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள், தாங்கள் வைத்திருந்த 100 ரூபாய் நோட்டுகளை கீழே வீசிவிட்டு, ரவிக்கு முன்னால் சென்று, அண்ணா உங்கள் பணம் கீழே விழுந்துவிட்டது என்று கூறியுள்ளனர். இதையடுத்து ரவி தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி சாலையில் கிடந்த பணத்தை எடுத்துள்ளார். அப்போது ரவியின் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.5 லட்சத்தை திருடி கொண்டு, மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.

இச்சம்பவம் குறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு தட்சிணாமூர்த்தி உத்தரவின்பேரில், அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், ஏட்டுக்கள் ரவி, ஆனந்தசேகர், டேவிட், சரவணன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு மர்மநபர்களை வலைவீசி தேடினர். இந்நிலையில் ரவியை ஏமாற்றி பணத்தை திருடியவர்கள் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் மலைக்கோவில்சோழபுரம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்றனர். பின்னர் ரவியின் பணத்தை திருடிய திருவெறும்பூர் காந்தி நகரை சேர்ந்த ராஜா என்ற குமார்(24), மலைக்கோவில் சோழபுரம் செல்வக்குமார்(32), திருவெறும்பூர் லோகேஸ்(24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 3 பேரையும் அறந்தாங்கி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்