கத்திக்குத்து காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த லோக் அயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி ‘டிஸ்சார்ஜ்’

வாலிபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லோக் அயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி நேற்று ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டார்.

Update: 2018-03-14 21:00 GMT
பெங்களூரு,

வாலிபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லோக் அயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி நேற்று ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டார். கடவுள் அருளால் ஆரோக்கியமாக இருக்கிறேன் என அவர் தெரிவித்தார்.

நீதிபதிக்கு கத்திக்குத்து

கர்நாடக லோக் அயுக்தா நீதிபதியாக இருந்து வருபவர் விஸ்வநாத் ஷெட்டி. பெங்களூருவில் உள்ள லோக் அயுக்தா தலைமை அலுவலகத்திற்குள் கடந்த 7-ந் தேதி புகுந்த துமகூருவை சேர்ந்த தேஜூராஜ் சர்மா(வயது 33) என்பவர், நீதிபதி விஸ்வநாத் ஷெட்டியை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில், அவரது கை, வயிறு, நெஞ்சில் பலத்தகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் விட்டல் மல்லையா ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு நீதிபதி விஸ்வநாத் ஷெட்டிக்கு டாக்டர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக தேஜூராஜ் சர்மாவை விதானசவுதா போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிஸ்சார்ஜ்

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி விஸ்வநாத் ஷெட்டியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு குணமடைந்தார். இதையடுத்து, நேற்று காலையில் அவர் தனியார் மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டார்.

ஆனாலும் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதால், அவர் வீட்டில் இருந்து நன்கு ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். நேற்று காலையில் மருத்துவமனையில் இருந்து நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி சிரித்தபடியே வெளியே வந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “மாநில மக்களின் ஆசீர்வாதத்தால் நான் நல்லபடியாக உள்ளேன். கடவுள் அருளால் ஆரோக்கியமாக இருக்கிறேன். இங்குள்ள டாக்டர்கள் சிறப்பாக எனக்கு சிகிச்சை அளித்தார்கள். நர்சுகளும் நல்லபடியாக கவனித்து கொண்டனர். அவர்களால் தான் நான் வேகமாக குணமடைந்து உள்ளேன். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துள்ளேன்“ என்றார். பின்னர் அவர் தனது வீட்டுக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்