தண்ணீர் எடுத்துச்சென்ற டேங்கர் லாரியை பொதுமக்கள் சிறைபிடிப்பு

எஸ்.வாழவந்தியில் தண்ணீர் எடுத்துச்சென்ற டேங்கர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-03-13 22:30 GMT
பரமத்தி வேலூர்,

பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான ஆழ்துளை கிணறுகளில் இருந்து தனியார் ஆலைகளுக்கு தண்ணீர் எடுத்து வருவதாகவும், இதனால் விளைநிலங்களில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் எஸ்.வாழவந்தி குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள ஒரு தனியார் ஆழ்துளை கிணற்றில் இருந்து தினசரி 30-க்கும் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்து வருவதால் குடிநீர் பயன்பாட்டிற்காக உள்ள பொதுக்கிணற்றில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாகவும், இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் எஸ்.வாழவந்தி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் ஏற்றி வந்த டேங்கர் லாரியை நேற்று காலை சிறை பிடித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூர் தாசில்தார் ருக்மணி, கிராம நிர்வாக அலுவலர் கல்பனா ஆகியோர் தனியார் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் விற்பனை செய்த அப்பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவரை அழைத்து இதுபோன்று இனிவரும் காலங்களில் தண்ணீர் விற்பனை செய்யக்கூடாது என கூறியதையடுத்து சிறை பிடிக்கப்பட்ட தண்ணீர் ஏற்றி வந்த டேங்கர் லாரி விடுவிக்கப்பட்டது.

இது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் இனிவரும் காலங்களில் தண்ணீர் விற்பது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பரமத்தி வேலூர் தாசில்தார் ருக்மணி தெரிவித்தார். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

இதேபோல் சோழசிராமணி, ஜேடர்பாளையம், பாண்டமங்கலம், பொத்தனூர், கரையாம்புதூர், பரமத்தி வேலூர், பரமத்தி வேலூரில் இருந்து நன்செய்இடையாறு செல்லும் புதுரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டேங்கர் லாரிகள் மூலம் தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் காவிரி கரையோரப் பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் விரைவில் குடிநீர் பிரச்சினை ஏற்படக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.

எனவே இப்பகுதிகளிலும் தனியாருக்கு சொந்தமான ஆழ்துளை கிணறுகள் மூலம் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்வதை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்