சோமவாரப்பட்டியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் சுகாதார சீர்கேடு
சோமவாரப்பட்டியில் கழிவு நீர் வாய்க்கால் தூர்வாரப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிமங்கலம்,
குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்டது சோமவாரப்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் பெதப்பம்பட்டி, அம்மாபட்டி, ஆர்.ஜி.ரத்தினம்மாள் நகர், சோமவாரப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
சோமவாரப்பட்டி ஊராட்சியில் பல பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. இதனால் பல பகுதிகளில் கழிவுநீர் செல்ல வடிகால் வசதி இல்லாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதனால் அந்த பகுதி முழுவதும் பொதுமக்கள் செல்லமுடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
குறிப்பாக சோமவாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பராயசாமி கோவில் வீதியில் கழிவுநீர் கால்வாய் முழுவதும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தீர்த்தம் எடுத்துச்செல்வதற்காக இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் செல்வதால் பொதுமக்கள் நடந்து செல்லமுடியாத நிலை உள்ளது.
கழிவுநீர் தேங்கி உள்ளதால், அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வாரவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.