ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கோரி வழக்கு போலீஸ் சூப்பிரண்டுவிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க ஐகோர்ட்டு உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கோரி வழக்கு போலீஸ் சூப்பிரண்டுவிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-03-13 21:45 GMT

மதுரை,

தூத்துக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையினால் சுற்றுப்பகுதியில் காற்று, நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூடக்கோரியும் கடந்த பிப்ரவரி முதல் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையின் தீமைகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள ராஜாஜி பூங்காவில் கடந்த 9–ந்தேதி பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தோம். இதற்காக அனுமதி கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் மனு அளித்தோம். ஆனால் சட்டம்–ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி எங்கள் மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி கூட்டத்தை நடத்த முடியவில்லை. எனவே வருகிற 17–ந்தேதி ராஜாஜி பூங்காவில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கை 14–ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்