பலரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டவர் மனைவியுடன் கைது

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி, வக்கீல், அமைச்சரின் உதவியாளர் என கூறி பலரை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்தவரை மனைவியுடன் போலீசார் கைது செய்தனர். அவர் போலீஸ் அதிகாரிகளையும் செல்போனில் மிரட்டினார்.

Update: 2018-03-13 23:15 GMT
செங்குன்றம்,

சென்னையை அடுத்த செங்குன்றம் விளாங்காடுபாக்கத்தை சேர்ந்தவர் ஆடலரசு(வயது 27). இவர் புழல் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் வாடகைக்கு விடுவதற்காக ஒரு புதிய காரை வாங்கினார். இந்த காரை ஒரு கால்டாக்சி நிறுவனத்துடன் வாடகைக்கு ஒப்பந்தம் செய்யப்போவதாக விளம்பரம் செய்திருந்தார்.

இதைப்பார்த்து சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த நிர்மல்மகேஷ்(47) என்பவர் இவரை தொடர்புகொண்டு அந்த காரை தான் வாங்கிக்கொள்வதாக கூறினார். ரூ.50 ஆயிரம் கொடுத்துவிட்டு, மீதிப்பணத்தை விரைவில் தருவதாக கூறி காரை வாங்கிச் சென்றார். அதன்பின்னர் காருக்கான மீதி பணத்தை தரவில்லை.

இதனால் ஆடலரசு காரை திருப்பிக்கேட்டார். அதற்கு நிர்மல்மகேஷ், நான் கொடுத்த ரூ.50 ஆயிரத்தை எனது வங்கி கணக்கில் போட்டுவிடு, காரை கொடுத்துவிடுகிறேன் என கூறினார். அதன்படி ஆடலரசு ரூ.50 ஆயிரத்தை அவரது வங்கி கணக்கில் செலுத்தியும் காரை தரவில்லை.

காருக்கான தவணைத்தொகை ரூ.20 ஆயிரம், சர்வீஸ் செய்த செலவுடன் சேர்த்து ரூ.27 ஆயிரம் கொடுக்க வேண்டும் என ஆடலரசிடம் கேட்டார். அவர் தரமறுத்ததால் ஆடலரசையும் அவரது மனைவி நிரோஷாவையும் போனில் ஆபாசமாக திட்டினார். இதுகுறித்து செங்குன்றம் போலீசில் ஆடலரசு புகார் செய்தார்.

செங்குன்றம் சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், விசாரணைக்காக நிர்மல்மகேசை காவல் நிலையம் வரும்படி கூறினார். ஆனால் அவர் புழல் உதவி கமிஷனர் பிரபாகரனை தொடர்புகொண்டு, நான் பிரபல வக்கீல் என்னை காவல் நிலையம் வரும்படி சப்-இன்ஸ்பெக்டர் எப்படி அழைக்கலாம் என தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் மாதவரம் துணை கமிஷனர் கலைச்செல்வனை தொடர்புகொண்டு என்னுடைய பவர் தெரியாமல் போலீசார் என்னை விசாரணைக்கு அழைக்கிறார்கள் என மிரட்டல் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது.

இதில் சந்தேகம் அடைந்த துணை கமிஷனர் கலைச்செல்வன் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் பிரபாகரன் மேற்பார்வையில் செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் தலைமையில் நிர்மல்மகேஷை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றனர்.

இதையறிந்த நிர்மல்மகேஷ் வீட்டை காலி செய்து மனைவி அனிதாவுடன் உடுமலைப்பேட்டைக்கு சென்று ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதையறிந்த போலீசார் உடுமலைப்பேட்டைக்கு சென்றபோது, அவர் இரவோடு இரவாக புதுச்சேரிக்கு சென்றுவிட்டார். தனிப்படை போலீசார் புதுச்சேரி சென்று நிர்மல்மகேஷ், அவரது மனைவி அனிதா (22) ஆகியோரை கைது செய்து செங்குன்றம் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

நிர்மல்மகேஷ் எம்.பி.ஏ. வரை படித்துவிட்டு, மதுராந்தகத்தை சேர்ந்த சிவகாமி என்பவரை முதலில் திருமணம் செய்தார். அவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்ததும் அவரை விட்டுப்பிரிந்து செங்குன்றத்தை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். 2 மனைவிகளிடம் இருந்தும் நகைகளை பறித்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.

அதன் பிறகு அம்பத்தூரை அடுத்த கள்ளிகுப்பத்தில் வீடு எடுத்து தங்கினார். அங்கு சரளா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அவரது மகள் அனிதாவை 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதிலிருந்து பல மோசடிகளில் ஈடுபட தொடங்கினார். ஈரோடு கொடுமுடியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவரிடம் வங்கியில் ரூ.2 கோடி கடன் வாங்கித்தருவதாக கூறி ரூ.50 ஆயிரம் மோசடி செய்துள்ளார்.

அம்பத்தூரை சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் புதிய கார் வாங்கித்தருவதாக ரூ.20 ஆயிரம் மோசடி செய்தார். திருவள்ளூரை அடுத்த திரூரை சேர்ந்த சுந்தர் என்பவரிடம் காலி நிலத்திற்கு வங்கி கடன் வாங்கித்தருவதாக ரூ.1 லட்சம் மோசடி செய்துள்ளார். மேலும் இவர் மீது சென்னை கொத்தவால்சாவடி, அசோக்நகர் ஆகிய காவல் நிலையங்களில் மோசடி வழக்குகள் உள்ளன.

இவர் ஆளுக்கு ஏற்றார்போல, தான் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி என்றும், அமைச்சரின் உதவியாளர் என்றும், வக்கீல் என்றும் கூறி ஏமாற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்தார். அவர்கள் மேலும் என்னென்ன மோசடிகள் செய்துள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்