வாணாபுரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்திய 4 டிராக்டர்கள் பறிமுதல்
வாணாபுரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்திய 4 டிராக்டர்களை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி பறிமுதல் செய்தார்.
வாணாபுரம்,
வாணாபுரம் அருகே உள்ள சதாகுப்பம் தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்துவதாக திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் தண்டராம்பட்டு தாசில்தார் சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜ் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவு சதாகுப்பம் தென்பெண்ணை ஆற்றில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பல்வேறு இடங்களில் தனித் தனியாக மணல் ஏற்றி கொண்டு இருந்தனர்.
அதிகாரிகளை கண்டதும் மணல் கடத்தி கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து அதிகாரிகள் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 4 டிராக்டர்களை பறிமுதல் செய்து வாணாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சேத்துப்பட்டு தாசில்தார் அரிதாஸ், வருவாய் ஆய்வாளர் பிரியா, கிராம நிர்வாக அலுவலர்கள் பழனிசாமி, ஆனந்தபாபு ஆகியோர் நேற்று தேவிகாபுரம் நான்குவழி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த ரகு, பாபு ஆகியோர் தனித்தனியாக மாட்டு வண்டிகளில் ஒதலவாடி அருகே உள்ள ஆற்றுப்படுகையில் இருந்து மணல் கடத்தி வந்தனர். இதையடுத்து வருவாய் துறையினர் 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
தச்சூர் ஆற்றில் இருந்து மினிலாரியில் முருகன் என்பவர் மணலை கடத்தி வந்தார். மினிலாரியையும் வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒப்படைக்கப்பட்டது.