ஈரோட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 13 பேரிடம் ரூ.34¾ லட்சம் மோசடி

ஈரோட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 13 பேரிடம் ரூ.34¾ லட்சம் மோசடி செய்த போலி நிருபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-13 22:00 GMT
ஈரோடு, 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த விஜயராகவன் என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமாரிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

பவானி அருகே உள்ள ஒரிச்சேரியை சேர்ந்த கண்ணன் (வயது 32), கோபி அருள்நகரை சேர்ந்த மனோஜ்குமார் (48) ஆகியோர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூலித்து ஏமாற்றி வருகிறார்கள். பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றியுள்ளார்கள். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

அவருடைய உத்தரவின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கண்ணனும், மனோஜ்குமாரும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 13 பேரிடம் ரூ.34 லட்சத்து 84 ஆயிரம் வசூலித்ததும், அவர்களிடம் போலியான அரசு வேலை உத்தரவுகளை கொடுத்து மோசடி செய்ததும் தெரியவந்தது. மேலும், கண்ணன் ஒரு தனியார் பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வருவதாகவும், மனோஜ்குமார் பா.ஜ.க. கட்சியின் பிரமுகர் என்றும் பொய் சொல்லி பொதுமக்களிடம் பணத்தை வசூலித்தது தெரியவந்து உள்ளது.

இதைத்தொடர்ந்து கண்ணனையும், மனோஜ்குமாரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களை போலீசார் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்