காட்டுத்தீயில் சிக்கி உடல் கருகிய புதுப்பெண் சாவு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது
குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி உடல் கருகிய கவுந்தப்பாடி புதுப்பெண் நேற்று உயிரிழந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.
கவுந்தப்பாடி,
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி மகாத்மாபுரத்தை சேர்ந்தவர் நடராஜ். அவருடைய மகன் விவேக் (வயது 26) என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த திவ்யா (26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் இவர்களது திருமணம் நடந்தது. திவ்யா எம்.எஸ்சி. முடித்துவிட்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.
இதற்கிடையில் விவேக் துபாய்க்கு சென்றுவிட்டார். தனது மனைவியை துபாய்க்கு அழைத்து செல்வதற்காக கடந்த 1-ந் தேதி அவர் மீண்டும் இந்தியாவுக்கு வந்தார். வருகிற 28-ந் தேதி விவேக்கும், திவ்யாவும் துபாய்க்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் புதுமண தம்பதியினர் தங்களது திருமணமான 100-வது நாளையொட்டி குரங்கணிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். அதன்படி சென்னிமலையை சேர்ந்த சுற்றுலா ஏஜென்சி நடத்தி வரும் பிரபு என்பவருடன் குரங்கணிக்கு சென்றனர். கடந்த 11-ந் தேதி குரங்கணி மலையில் இருந்து அவர்கள் இறங்கியபோது ஏற்பட்ட பயங்கரமான காட்டுத்தீயில் விவேக், திவ்யா மற்றும் அவர்களுடன் சென்றவர்களும், சென்னையில் இருந்து வந்த மற்றொரு குழுவினரும் சிக்கிக்கொண்டார்கள். இதில் உடல் கருகிய விவேக் நேற்று முன்தினம் இறந்துவிட்டார்.
பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட திவ்யா மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் திவ்யா நேற்று காலை இறந்துவிட்டார்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவருடைய உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பார்த்து அவருடைய உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
விவேக் இறந்த துக்கத்தில் இருந்த அவருடைய வீட்டாருக்கு திவ்யாவும் இறந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் வட்டக்கல்வலசு முத்துக்குமார் மகள் திவ்யா, கவுந்தப்பாடியை சேர்ந்த விவேக், அவருடைய நண்பர் தமிழ்செல்வன் என 3 பேர் நேற்று முன்தினம் இறந்தனர்.
இந்தநிலையில் நேற்று விவேக்கின் மனைவி திவ்யாவும் இறந்ததால் ஈரோடு மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 4 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 11 ஆகவும் உயர்ந்துள்ளது.