கொடைக்கானல் மலைப்பகுதியில் பூக்க தொடங்கிய நீல குறிஞ்சி மலர்கள்

கொடைக்கானல் மலைப்பகுதியில் நீல குறிஞ்சி மலர்கள் பூக்க தொடங்கின. 12 ஆண்டுகளுக்கு பிறகு பூப்பதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

Update: 2018-03-13 21:45 GMT
கொடைக்கானல்,

‘மலைகளின் இளவரசி’ என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். அவர்கள், கொடைக் கானலில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலையை அனுபவிக்கின்றனர்.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நீல குறிஞ்சி மலர்ச்செடிகள் அதிகளவில் உள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பது இதன் தனி சிறப்பு. கடந்த 2006-ம் ஆண்டு மலை பகுதியின் பல்வேறு இடங்களில் நீல குறிஞ்சி பூக்கள் பூத்து குலுங்கின. அந்த சமயத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் களைகட்டியது.

இந்தநிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நீல குறிஞ்சி பூக்கள் பூக்க தொடங்கின. ஒரு சில இடங்களில் ஒன்றிரண்டு பூக்கள் அவ்வப்போது பூத்து வந்தன. தற்போது நகரின் பல்வேறு பகுதிகளில் நீல குறிஞ்சிப்பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இந்த ஆண்டின் இறுதி வரை பூக்கள் பூக்கும் என கருதப்படுகிறது. இதையொட்டி பூக்களை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை காண்பதற்காக வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதுமான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில் ‘தற்போது அட்டுவம்பட்டி, குறிஞ்சி ஆண்டவர் கோவில், வில்பட்டி பிரிவு போன்ற பகுதிகளில் குறிஞ்சிப்பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இவை வரும் நாட்களில் அனைத்து பகுதிகளிலும் பூக்கும். இதன் விதைகளை சேகரித்து, வரும் நாட்களில் அதிக அளவு குறிஞ்சி செடிகளை நடவு செய்ய வேண்டும். இதன்மூலம் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்றனர். 

மேலும் செய்திகள்