‘மனிதாபிமானத்துடனும், மனசாட்சியோடும் பணியாற்ற வேண்டும்’ போக்குவரத்து போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

மனிதாபிமானத்துடனும், மனசாட்சியோடும் பணியாற்ற வேண்டும் என்று போக்குவரத்து போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை கூறியுள்ளார்.

Update: 2018-03-13 22:15 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் காவலர் சமுதாயக்கூடத்தில் நேற்று போக்குவரத்து போலீசாருக்கான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்து போக்குவரத்து போலீசார்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

திருச்சி திருவெறும்பூரில் நடந்த சம்பவம்போன்று விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து விடக்கூடாது என்ற எண்ணத்திலும், மக்களிடம் போக்குவரத்து போலீசார் எப்படியெல்லாம் அணுக வேண்டும் என்பதற்காகவும் இந்த புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏனெனில் மற்ற போலீசாரை காட்டிலும் போக்குவரத்து போலீசார்தான் அதிகளவில் வாகன தணிக்கை செய்கின்றனர்.

அவ்வாறு வாகன தணிக்கை செய்யும்போது மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நம்முடைய அண்ணன், தம்பி வந்தால் அவர்களை எப்படி அணுகுவீர்களோ அதுபோல் பிறரையும் அணுக வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் பணம் வாங்காதீர்கள். வழக்கு போட்டு அபராதம் விதிக்கும்போது சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு ரசீது கொடுக்க வேண்டும். நம்முடைய வேலையை சரியாக செய்தால் யாரும் நம்மை குறை சொல்ல முடியாது.

சீருடை பணி என்பது எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது. வயதான முதியவரையோ, மூதாட்டியையோ சாலையை கடக்க உதவி செய்யுங்கள். அதுபோன்ற மனிதாபிமான செயலைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். யாராவது ஒரு போலீஸ், பணம் வாங்கினாலும்கூட எல்லோரும் பணம் வாங்குவதாகத்தான் கருதுவார்கள். மக்கள் மத்தியில் நம்முடைய மதிப்பு, மரியாதையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். வாகனத்தை நிறுத்தி வழக்கு போடுவதால் எந்த மதிப்பு, மரியாதையும் வராது. வழக்கு போடுவதுதான் நமது எண்ணம் என்று செயல்படாதீர்கள். விதிமுறையை மீறிச்செல்லும் வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களிடம் தகுந்த அறிவுரை கூறுங்கள். அப்போதுதான் நம் மீது மக்களுக்கு மிகுந்த மரியாதை ஏற்படும்.

உங்களுக்கு பின்னால் ஒரு குடும்பம், ஒரு துறை இருப்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும். முதலில் போலீசார், ‘ஹெல்மெட்’ அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டினால்தான் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். மற்றவர்களை விட போலீசாருக்குதான் எதிரிகள் அதிகம். உங்கள் முன்பு ஒரு கேமரா படம் பிடித்துக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் சிறப்பாக பணியாற்ற வேண்டும். லஞ்சம் வாங்கினால்தான் வாழ முடியும் என்பது கட்டாயமில்லை. மனசாட்சியோடு இருங்கள். மக்களிடம் அன்பாக பழகுங்கள். சமுதாயத்தில் நமக்கு இருக்கிற மரியாதையை நாமே கெடுத்துக் கொள்ளக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்