நோயற்ற வாழ்வு சாத்தியமே!

சுத்தமும், சுகாதாரமும் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் இருப்பது தான் பல்வேறு விதமான நோய்களுக்கு அடிப்படையான காரணம்.

Update: 2018-03-13 09:54 GMT
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், சுத்தம் சோறு போடும் என்றெல்லாம் நம் முன்னோர்கள் அருமையான கருத்துகளை சொல்லியுள்ளார்கள்.

தன் சுத்தம், சுற்றுப்புற தூய்மை பற்றிய புரிதலையும், அவசியத்தையும் குழந்தை பருவத்திலிருந்தே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும். கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்பும் பழக்கம் மிகவும் கெடுதலான செயல். எச்சலில் உள்ள நுண்கிருமிகள் வாயிலாக பல்வேறு தொற்றுநோய்கள் அதனை மிதிப்பவர்களுக்கு உண்டாகிறது.

பொதுவாகவே நம்மவர்கள் தெருவில் துப்புவதை ஒரு பழக்கமாகவே கொண்டுள்ளனர். வெற்றிலை பாக்கு போட்டு துப்பும் பழக்கமுள்ளவர்கள் கிடைக்கும் இடங்களிளெல்லாம் கூச்ச துப்புகிறார்கள். குறிப்பாக பேருந்து பயணத்தில் பேருந்து சென்றுக் கொண்டிருக்கும் போதே கூட துப்புவதால் பேருந்தில் சன்னல் ஓரம் உட்கார்ந்திருப்பவர் முதல் சாலையில் சென்றுக் கொண்டிருப்பவர் வரையும் அர்ச்சனை செய்யப்படுகிறார்கள்.

இங்கே யாருக்கும் யாரைப் பற்றியும் கவலையும், அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை. தான் மட்டும் வாழ வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி வருவதாக தெரிகிறது. புகைப்பிடிப்பவர்களைப் பற்றியும் அவர்களின் அட்டகாசங்களை பற்றியும் நேரில் காண்பவர்களுக்கு நன்கு புரியும். அடுத்தவரைப் பற்றியும் பொது சுகாதாரத்தைப் பற்றியும் அக்கறையின்றி செயல்படுவதால் நோய்கள் அதிகமாக உண்டாகின்றன.

குறிப்பாக பொது கழிப்பறைகளின் நிலையும் அதை பயன்படுத்துவோரின் பக்குவமின்மையும் மிகவும் மோசமான உணர்வை உண்டாக்குகிறது. பேருந்து நிலையம் போன்ற இடங்களில் திறந்த வெளியில் செய்யப்படும் அசுத்தம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்து விடுகிறது. உணவகங்களில் இருக்கும் தூய்மை, சுத்தம் பற்றி கேட்கவே வேண்டாம். அந்த அளவுக்கு சுகாதாரமின்றி உள்ளன. சுத்தம் சுகம் தரும் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட்டால் நோயற்ற வாழ்வு அனைவருக்கும் சாத்தியமே.

-பழனி

மேலும் செய்திகள்