சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்த தொழிலாளியால் பரபரப்பு

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்த ஓட்டல் தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-03-12 23:00 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை முருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது35), ஓட்டல் தொழிலாளி. இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக ராமமூர்த்தி வந்தார்.

கலெக்டர் அலுவலக வளாகம் அருகே நடந்து சென்ற போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவருடைய முகத்தில் தண்ணீரை தெளித்தனர். மயக்கம் தெளிந்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது தான் விஷம் குடித்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவரை போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் ராமமூர்த்தி கலெக்டரிடம் கொடுப்பதற்காக கொண்டு வந்திருந்த மனுவில், ‘நானும், எனது மனைவியும் ஓட்டல் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறோம். அங்கு ஏற்பட்ட தகராறில் என்னை 5 பேர் கடுமையாக தாக்கினர். இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். இதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனிடையே இந்த புகாரை திரும்ப பெறவில்லை என்றால் எனது குடும்பத்தை தீவைத்து எரித்து கொன்று விடுவதாக அவர்கள் மிரட்டி வருகின்றனர். எனவே என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டிருந்தது. இந்த சம்பவம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்