உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கும் போராட்டம்

திருவாரூரில் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கும் போராட்டம் நடைபெற்றது.

Update: 2018-03-12 22:45 GMT
திருவாரூர்,

சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு வழங்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி திருவாரூரில் நேற்று ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜிடம் கோரிக்கை மனு வழங்கி, போராட்டம் நடைபெற்றது.

இதில் சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல், சங்கத்தின் மாவட்ட செயலாளர் முனியாண்டி ஆகியோர் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்துறையில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு 28 நாட்களுக்கு ரூ.11 ஆயிரத்து 236-ம், துப்புரவு தொழிலாளர்களுக்கு 28 நாட்களுக்கு ரூ.9 ஆயிரத்து 234-ம் சம்பளமாக வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள 7-வது ஊதியக்குழுவின்படி சம்பளம் நிர்ணயம் செய்து நிலுவை தொகையை வழங்க வேண்டும். அதேபோல 2013-ம் ஆண்டில் பணி நியமனம் செய்யப்பட்டு தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

கோரிக்கை மனுவை கலெக்டரிடம் வழங்க பல்வேறு பகுதிகளை சேர்ந்த நீர்த்தேக்க தொட்டி இயக்குனர், துப்புரவு பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்