துப்புரவு பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்

அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம் வழங்க கோரி குடிநீர் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் திரண்டு வந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2018-03-12 22:45 GMT
கரூர்

கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை சங்கத்தை சேர்ந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் சார்பில் மனுக்கள் அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என அச்சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி மனு கொடுப்பதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் பலர் திரண்டு வந்தனர்.

மனுக்கள் பதியும் இடத்தில் அமர்ந்து தனித்தனியாக மனு கொடுப்பதாக கூறினர்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மொத்தமாக ஒரே மனுவாக கொடுக்கும்படி கூறினர். இதையடுத்து கோரிக்கை தொடர்பாக மனுவை அளித்தனர்.

ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை சங்கத்தினர் அளித்த மனுவில், “மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து அரசு கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தது.

அதன்படி துப்புரவு பணியாளர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரத்து 234-ம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 618-ம் வழங்க வேண்டும். மேலும் ஊதிய நிலுவை தொகையையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர்.

கரூர் மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில், “கரூர் மாவட்டத்தில் சாயப்பட்டறை நிறுவனங்கள் இரவு நேரங்களில் சாயக்கழிவுகளை வெளியே விடுகின்றனர். இதனால் விவசாய நிலங்கள், விவசாய கிணறுகள், குடிநீர் கிணறுகள் பாதிப்படைந்து வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. அதன் காரணமாக பல போராட்டங்கள் நடத்தியும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. சாயக்கழிவுகளை குடிநீர் ஆதாரங்களில் கலக்கவிடும் நபர்கள் மீதும், நடவடிக்கை எடுக்காத மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெறும்” என கூறியிருந்தனர்.

குப்புச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், வாங்கல் குப்புச்சிபாளையம் மயானத்தில் இருந்து கிழக்கு பகுதியில் செல்லும் பொது பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

சின்னகுளத்துப்பாளையம் பகுதியில் ரெயில்வே பாதை அருகே சாக்கடை கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயை தூர்வார அப்பகுதி பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், மின் வாரியத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருவதாகவும், பணி நிரந்தரம் செய்ய கோரி இன்று (அதாவது நேற்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், துறை அதிகாரிகளிடம் பேசி பணி நிரந்தரத்திற்கு வழி செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் அளித்த மனுவில், “வாங்கல் அக்ரஹாரத்தில் ஆரம்ப சுகாதார நிலைய சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும். தற்போது ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான இட வசதி இல்லாததால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் விரைந்து பணியை முடித்து மீண்டும் அக்ரஹாரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தனர்.

தெற்கு நரிக்கட்டியூர் எம்.ஆர். நகர் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டாஸ்மாக் கடை திறக்க கூடாது என வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர். இதேபோல பொதுமக்கள் பலர் பலவிதமான கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் கொடுத்தனர். பின்னர் மனுக்களை பெற்ற கலெக்டர் அன்பழகன் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்