குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி கும்பகோணம் சாப்ட்வேர் என்ஜினீயரும் பலியான பரிதாபம்

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி கும்பகோணத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரும் பரிதாபமாக பலியானார். ‘ஒரே மகளையும் பறி கொடுத்து விட்டோமே’ என்று அவரது தாயார் கதறி அழுதார்.

Update: 2018-03-12 23:00 GMT
கும்பகோணம்,

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணியை அடுத்த கொழுக்குமலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலியானார்கள். இவர்களில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரும் ஒருவர் ஆவார்.

கும்பகோணம் பகவத் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி-சாந்தி தம்பதியினரின் ஒரே மகள் அகிலா என்ற அகிலாண்டேஸ்வரி(வயது 24). இவர் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் பணியாற்றிய பூஜா, நிஷா, நிவேதா, அகிலாண்டேஸ்வரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மலையேற்ற பயிற்சிக்கு சென்றிருந்தனர். அவர்களுடன் சென்ற அகிலாவும் காட்டுத்தீயில் சிக்கி பலியானார்.

பலியான அகிலா, அவரது பெற்றோருக்கு ஒரே மகள் ஆவார். கும்பகோணம் பாணாதுறையில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு படித்தார். அந்த இரண்டு வகுப்புகளிலும் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.

அதன்பின்னர் தஞ்சையில் உள்ள ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படித்தார். படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட அகிலா, இயற்கை வளங்களை பாதுகாப்பதிலும் தீவிர ஆர்வம் கொண்டவர். ஆன்மிகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.

அகிலா இறந்தது குறித்து தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் இன்னும் முழுமையான அளவில் மீண்டு வரவில்லை. அவரது இறப்பு குறித்து அவரது தாயார் சாந்தி கண்ணீர் மல்க கூறியதாவது:-

அகிலா எங்களுக்கு ஒரே மகள். என் மீதும், அவரது தந்தை மீதும் மிகவும் பாசமாய் இருப்பாள். பள்ளி, கல்லூரியில் எல்லா வகுப்புகளிலும் முதல் இடத்தில் தேர்ச்சி பெறுவாள். மேலும் அவளுக்கு அதிக தோழிகள் உண்டு. அதனால் கடந்த பல ஆண்டுகளாக வெளியூரில் வேலைக்கு சென்றாலும், அவளது தோழிகளிடம் எங்களை நன்றாக பார்த்துக்கொள்ளச் சொல்லி அடிக்கடி தெரிவித்துக்கொண்டே இருப்பாள்.

அவளுக்கு படிப்பைத் தவிர ஆங்கில இலக்கியத்திலும் அதிக ஆர்வம் உண்டு. அடுத்தவர்களுக்கு பயனுள்ள வகையில் வாழவேண்டும் என்று அடிக்கடி கூறுவாள். எங்களுக்கு இருந்தது ஒரே மகள். இருந்த ஒரே மகளையும் பறிகொடுத்து விட்டு நிர்க்கதியாக நிற்கிறோம். அவளது இழப்பை எப்படி ஈடுசெய்யப்போகிறோம் என்று எங்களால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லையே என்று கதறி அழுதார். 

மேலும் செய்திகள்