ஊத்துக்கோட்டை அருகே அரசு மருந்து சேமிப்பு கிடங்கில் சுகாதார இயக்குனர் ஆய்வு

ஊத்துக்கோட்டை அருகே கட்சூரில் உள்ள அரசு மருந்து சேமிப்பு கிடங்கில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி ஆய்வு செய்தார்.

Update: 2018-03-12 22:45 GMT
ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டத்தில் 11 அரசு ஆஸ்பத்திரிகள், 65 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றுக்கு காஞ்சீபுரத்தில் உள்ள அரசு மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து வேன்கள் மற்றும் இதர வாகனங்கள் மூலமாக மருந்து, மாத்திரைகளை வினியோகம் செய்யப்பட்டு வந்தன.

இந்த மருந்து, மாத்திரைகளை அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் காஞ்சீபுரம் மருந்து சேமிப்பு கிடங்கில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். இதன்காரணமாக காஞ்சீபுரத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு மருந்து, மாத்திரைகளை வினியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனை கருத்தில்கொண்டு ஊத்துக்கோட்டை அருகே கட்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சொந்தமான காலி இடத்தில், மருந்து சேமிப்பு கிடங்கு கட்ட சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகரன் ஆகியோர் அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

இதற்காக 2.05 ஏக்கர் நிலத்தை அளித்தனர். இதையடுத்து அரசு ரூ.3½ கோடி ஒதுக்கியது. அந்த நிதியை கொண்டு மருந்து சேமிப்பு கிடங்கு கட்டும் பணிகள் முடிக்கப்பட்டு சமீபத்தில் கிடங்கு செயல்படத்தொடங்கியது.

தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 11 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 65 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இங்கிருந்துதான் மருந்து, மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி நேற்று இந்த அரசு மருந்து சேமிப்பு கிடங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கிடங்கில் உள்ள மருந்து, மாத்திரைகள் இருப்பு பற்றியும், எந்தெந்த மருந்துகள், எந்தெந்த அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்ற விவரங்களையும் அவர் கேட்டறிந்தார்.

அப்போது அவருடன் துணை இயக்குனர் பிரபாகரன், வட்டார மருத்துவ அலுவலர் ராமசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக சுகாதார இயக்குனர் தலைமையிலான அதிகாரிகளை கிடங்கு பொறுப்பாளர் மகபூப்பாஷா வரவேற்றார்.

மேலும் செய்திகள்