‘காவல்துறையினர், மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பதில்லை’ விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் நல்லக்கண்ணு குற்றச்சாட்டு

காவல்துறையினர், மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பதில்லை என்று விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நல்லக்கண்ணு குற்றம்சாட்டினார்.

Update: 2018-03-12 22:30 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை அனைத்துக்கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருக்கோவிலூர் தாலுகா வெள்ளம்புத்தூரில் 7 வயது சிறுவன் சமயன் படுகொலை மற்றும் அவனது தாய்-சகோதரி ஆகியோர் சரமாரியாக தாக்கப்பட்டதை கண்டித்தும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உட்படுத்தக்கோரியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தை பொன்முடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் நல்லக் கண்ணு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து ஆதிதிராவிட மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வெள்ளம்புத்தூரில் 7 வயது சிறுவனை கொலை செய்ததோடு அவனது தாய்-சகோதரியையும் பலமாக தாக்கியுள்னர்.

இந்த சம்பவத்தில் இன்னும் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்யவில்லை. இதுபோல் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஆதிதிராவிட மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் அதிகாரி எட்டி உதைத்ததில் 3 மாத கர்ப்பிணி உஷா இறந்துள்ளார். சென்னையில் அப்பாவி கல்லூரி மாணவி அஸ்வினி, நடுரோட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதுபோன்ற குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை தடுக்க அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல்துறையினர், மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பதில்லை. அரசுக்கும், அதிகாரிகளுக்கும்தான் பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆணவ கொலைகள் ஒவ்வொரு நாளும் நடந்து வருகிறது. அதை காவல்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி பிரச்சினையில் தமிழகம் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை. மத்திய அரசின் எடுபிடி அரசாகத்தான் மாநில அரசு செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்