டி.வி. சத்தத்தை குறைக்கும்படி கூறியதால் ஆத்திரம்: வாலிபரை கொலை செய்த வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை

டி.வி. சத்தத்தை குறைக்கும்படி கூறியதால் ஆத்திரத்தில் வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2018-03-12 22:15 GMT
செங்கல்பட்டு,

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை காமாட்சி அம்மன் கோவில் முதல் தெருவைச்சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 62). இவரது பக்கத்து வீட்டைச்சேர்ந்தவர் தருண்(32). இவர், சென்னை தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வாடகைக்கு மினி டெம்போ ஓட்டிவந்தார்.

கடந்த 27-4-2012 அன்று இரவு தருண், வழக்கம்போல் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது மாரியப்பன், தனது வீட்டில் டி.வி.யை அதிக சத்தமாக வைத்து பார்த்துக்கொண்டிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தருண், குழந்தை தூங்குவதால் டி.வி. சத்தத்தை குறைத்து வைக்கும்படி முதியவர் மாரியப்பனிடம் கூறினார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாரியப்பன், வீட்டில் இருந்த கத்தியால் தருணை குத்திக்கொலை செய்தார். இது குறித்த புகாரின்பேரில் பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதியவர் மாரியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை செங்கல்பட்டு மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து இந்த வழக்கில் நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், வாலிபரை கொலை செய்த முதியவர் மாரியப்பனுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்