காவலர் பணிக்கான எழுத்து தேர்வு புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 ஆயிரத்து 3 பேர் எழுதினர்

காவலர் பணிக்கான எழுத்து தேர்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 ஆயிரத்து 3 பேர் எழுதினார்கள்.

Update: 2018-03-11 22:45 GMT
திருவரங்குளம்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலை காவலர் பணி, தீயணைப்பாளர், சிறை வார்டன் உள்ளிட்ட பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று நடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில், திருவரங்குளம் அருகே உள்ள கைக்குறிச்சி பாரதி கலை அறிவியல் கல்லூரி மற்றும் வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்ட 2 தேர்வு மையங்களில் இந்த எழுத்துத்தேர்வு நடந்தது.

இந்த தேர்வை எழுத புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 ஆயிரத்து 628 பேருக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டு இருந்தது. நேற்று நடைபெற்ற இந்த தேர்வை 5 ஆயிரத்து 3 பேர் மட்டுமே எழுதினர். 625 பேர் தேர்வு எழுதவரவில்லை. தேர்வு எழுத வந்த ஆண்கள் மற்றும் பெண்களை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முழு சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர். தேர்வு எழுத வந்தவர்கள், தேர்வு மையத்திற்குள் நீல நிற அல்லது கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா மற்றும் எழுத்துகள் எதுவும் இல்லாத பரீட்சை எழுதும் அட்டை ஆகியவற்றை மட்டுமே கொண்டு செல்ல பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனுமதித்தனர்.

செல்போன், கால்குலேட்டர், பென்சில், ரப்பர் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய மற்ற பொருட்கள் எதையும் தேர்வு மையத்திற்குள் போலீசார் அனுமதிக்கவில்லை. தேர்வு மையங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் போலீசார், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர்வு மையங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். தேர்வு எழுத வருபவர்களுக்காக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் நேற்று காலை 7 மணி முதல் இயக்கப்பட்டன. 

மேலும் செய்திகள்