திருவண்ணாமலைக்கு சீடர்களுடன் ‘திடீர்’ பயணமாக வந்த நித்யானந்தா

திருவண்ணாமலைக்கு சீடர்களுடன் திடீரென வந்த நித்யானந்தா, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த கோபூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தபின் யோகீஸ்வரர் சன்னதி அருகே தனியாக தியானம் மேற்கொண்டார்.

Update: 2018-03-11 23:00 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தாவின் ஆசிரமம் கிரிவலப்பாதையில் உள்ளது. தற்போது நித்யானந்தா, கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆசிரமத்தில் சீடர்களுடன் தங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள பவழக்குன்று மலையில் 3 ஏக்கர் நிலத்தை நித்யானந்தாவின் சீடர்கள் ஆக்கிரமித்து தென்னங்கீற்றுகளால் குடில் அமைத்திருந்தனர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாக உத்தரவின்பேரில், போலீசார், நித்யானந்தா சீடர்கள் அமைத்த குடிலை அகற்றினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கிரிவலப் பாதையில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தின் முன்பு, டாக்டர் மனோஜ் என்பவரை மனதை மாற்றி நித்யானந்தா அழைத்து சென்றுவிட்டதாக குற்றம்சாட்டி டாக்டரின் பெற்றோர் ஆசிரமத்தை முற்றுகையிட்டனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் நித்யானந்தா தனது சீடர்களுடன் திடீரென திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் அவர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கோ பூஜையிலும், அருணாசலேஸ்வரருக்கு நடைபெற்ற அபிஷேக பூஜையிலும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்துவிட்டு, நவக்கிரகங்களுக்கு நடைபெற்ற பூஜையிலும் கலந்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து அவர், தனது சீடர்களுடன் அருணாசலேஸ்வரர் சன்னதிக்கு பின்புறம் உள்ள அருணகிரி யோகீஸ்வரர் சன்னதி அருகே சென்று தனியாக தியானம் மேற்கொண்டார். பின்னர் அவரிடம், ஏராளமான பக்தர்கள் அருளாசி பெற்றனர்.

அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நித்யானந்தா திடீரென தனது சீடர்கள் புடை சூழ வந்தது எதற்காக, காரணம் இல்லாமல் அவர் எதையும் செய்யமாட்டார் என்பன போன்ற பதில் கிடைக்காத கேள்விகள் செல்போன்கள் மூலம் வைரலாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்