குண்டடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதிய விபத்து; 3 பேர் படுகாயம்
குண்டடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதிய கோர விபத்தில் தம்பதி உள்பட 4 பேர் பலியானார்கள். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குண்டடம்,
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 27). இவரும் இவருடைய நண்பர் ஒருவரும் திருப்பூரில் தங்கி அங்குள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இவர்கள் வேலை செய்யும் பனியன் நிறுவனத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை என்பதால் 2 பேரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லுக்கு சென்றனர். பின்னர் இன்று (திங்கட்கிழமை) பனியன் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதால் நேற்று மாலையில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லில் இருந்து திருப்பூருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சுதாகர் ஓட்டினார். பின் இருக்கையில் அவருடைய நண்பர் அமர்ந்து இருந்தார்.
இவர்களுடைய மோட்டார் சைக்கிள் நேற்று இரவு 8 மணிக்கு திருப்பூர் மாவட்டம் தாராபுரம்–குண்டடம் சாலையில் குண்டடத்தை கடந்து ருத்ராவதி அருகே சென்று கொண்டிருந்தது. இவர்களுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் 40 வயது மதிக்க தக்க ஒரு தம்பதியும் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே பல்லடத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த காரை ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பால்ராஜ் (28) என்பவர் ஓட்டினார். அவருடைய இருக்கை அருகே செந்தில்குமார் (35) அமர்ந்து இருந்தார்.
கண் இமைக்கும் நேரத்தில் பால்ராஜ் ஓட்டிவந்த கார், சுதாகர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீதும், தம்பதியின் மோட்டார் சைக்கிள் மீதும் பயங்கரமாக மோதியதோடு நிற்காமல், அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு மொபட் மீதும் பயங்கரமாக மோதியது. பின்னர் அந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி நின்றது.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே சுதாகரும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியும் துடிதுடித்து இறந்தனர். இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் குண்டடம் போலீசாரும், அந்த பகுதி பொதுமக்களும் விரைந்து சென்று காயம் அடைந்த சுதாகரின் நண்பர் மற்றும் காரை ஓட்டிவந்த பால்ராஜ், மற்றும் காரில் பயணம் செய்த செந்தில்குமார், மொபட்டை ஓட்டி வந்த 50 வயது மதிக்க தக்க நபர் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகதாரின் நண்பரும் இறந்தார்.
இதையடுத்து பால்ராஜ், செந்தில்குமார் மற்றும் மொபட்டை ஓட்டி வந்த 50 வயது மதிக்க தக்க நபர் ஆகியோருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்குஅவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு விபத்தில் பலியான தம்பதி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? சுதகாரின் நண்பர் பெயர் என்ன? மொபட்டில் சென்று காயம் அடைந்தவரின் பெயர் என்ன? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குண்டடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி வந்தகார், அதிக வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள்கள் நொறுங்கி சின்னாபின்னமாது. மோட்டார் சைக்கிள்கள் பதிவு எண் எழுதிய போர்டும் உடைந்து விட்டது. இதனால் பதிவு எண் தெரியவில்லை. இதனால் பலியானவர்கள் யார்? என்று அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.