கடற்படை தலைவிகள்

இந்திய கடற்படையை சேர்ந்த பெண்கள் குழு வழிநடத்தி சென்ற ‘ஐ.என்.எஸ்.வி’ என்ற இந்திய கடற்படையின் பாய்மர கப்பல் உலக சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

Update: 2018-03-11 07:26 GMT
ந்திய கடற்படையை சேர்ந்த பெண்கள் குழு வழிநடத்தி சென்ற ‘ஐ.என்.எஸ்.வி’ என்ற இந்திய கடற்படையின் பாய்மர கப்பல் உலக சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த கப்பல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந் தேதி கோவாவில் பெண் லெப்டினன்ட் கமாண்டர் வர்த்திகா ஜோஷி தலைமையில் கடற்பயணத்தை தொடங்கியது. லெப்டினன்ட் கமாண்டர்கள் பிரதிபா, சுவாதி, ஐஸ்வர்யா, விஜயா தேவி, பாயல் குப்தா ஆகியோர் அதில் அங்கம் வகித்தனர். இந்திய பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் கடல் பகுதியில் மேற்கொண்ட 7 மாத பயணத்தில் 21,600 நாட்டிங்கல் மைல் தூரம் உலக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறது.

முதல்கட்டமாக நவம்பர் 9-ந் தேதி ஆஸ்திரேலியாவின் கேப் லியூவின் பகுதியை சென்றடைந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து நியூசிலாந்தின் லைட்லீடன், பால்க்லாந்து தீவு பகுதிகளுக்கு சென்றுவிட்டு இறுதியில் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் துறைமுகத்தை சென்றடைந்திருக்கிறது. கடற்படையில் பெண் ஆளுமைத்திறனை ஊக்குவிக்கும் நோக்கத்திலும், சவாலான பயணங்களையும், அதில் ஏற்படும் சிக்கல்களையும் எதிர்கொள்ளும் மனோபாவத்தை உருவாக்கும் வகையிலும், உலகின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த பயணத்தின்போது கடல் அலைகளில் ஏற்படும் மாற்றம், வானிலை முன்னறிவிப்பு, வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள், ஆழ்கடலில் ஏற்படும் மாசுக்கள் போன்றவற்றை பற்றி இந்த குழுவினர் அறிந்திருக்கிறார்கள். கேப்டவுன் துறைமுகத்தில் இருந்து வருகிற 14-ந்தேதி புறப்படும் இந்த கப்பல் ஏப்ரல் மாதம் கோவாவை வந்தடைந்து பயணத்தை பூர்த்தி செய்யும்.

மேலும் செய்திகள்