ஜனதாதளம்(எஸ்) வேட்பாளரை ஆதரிக்க காங்கிரஸ் முடிவு?

டெல்லி மேல்-சபைக்கு நடைபெற உள்ள தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரிக்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2018-03-10 23:49 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல்-சபையில் தற்போது எம்.பி.க்களாக ரகுமான்கான், ராஜீவ் சந்திரசேகர், ராமகிருஷ்ணா, பசவராஜ் கவுடா பட்டீல் ஆகிய 4 பேர் உள்ளனர். அவர்களது பதவி காலம் அடுத்த மாதம்(ஏப்ரல்) 2-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, அந்த 4 இடங்களுக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கர்நாடக சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் ஆளும் காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும், பா.ஜனதா கட்சிக்கு ஒரு எம்.பி. பதவியும் கிடைப்பது உறுதியாகி உள்ளது. ஆனாலும் வெற்றி பெற போதுமான எம்.எல்.ஏ.க்களின் பலம் இல்லாத நிலையிலும் டெல்லி மேல்-சபை தேர்தலில் போட்டியிட ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் 5-வது வேட்பாளராக பாரூக் என்பவரை, அக்கட்சி நிறுத்தியுள்ளது.

இதையடுத்து, நேற்று முன்தினம் டெல்லி மேல்-சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக பாரூக் வேட்பு மனுவும் தாக்கல் செய்தார். இந்த நிலையில், சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி மேல்-சபை தேர்தலில் 3 வேட்பாளர்களை நிறுத்தி, சுயேச்சைகள் மற்றும் பிற எம்.எல்.ஏ.களின் ஆதரவுடன் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஆனால் 2 வேட்பாளர்களை மட்டுமே நிறுத்திவிட்டு, ஜனதாதளம்(எஸ்) சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பாரூக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக முதல்- மந்திரி சித்தராமையா, மாநில தலைவர் பரமேஸ்வர், காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, 2 வேட்பாளர்களை மட்டும் நிறுத்திவிட்டு, ஜனதாதளம்(எஸ்) வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது பற்றி இறுதி முடிவு எடுக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளன. கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த முடிவை காங்கிரஸ் எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஜனதாதளம்(எஸ்) வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதா? அல்லது 3-வது வேட்பாளரை நிறுத்துவதா? என்பது பற்றி ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. 

மேலும் செய்திகள்