ராகுல்காந்தி வருகிற 24-ந்தேதி மைசூரு வருகை சித்தராமையா தகவல்

2 நாள் சுற்றுப்பயணமாக ராகுல்காந்தி வருகிற 24-ந்தேதி மைசூருவுக்கு வருகிறார் என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.

Update: 2018-03-10 23:34 GMT
மைசூரு,

மைசூருவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் மைசூருவுக்கு வந்தார். நேற்று முன்தினம் பிரியப்பட்டணா பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், இரவு மைசூரு ராமகிருஷ்ணா நகரில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்தார். இந்த நிலையில் நேற்று காலை, முதல்- மந்திரி சித்தராமையா மைசூரு-கே.ஆர்.எஸ். சாலையில் உள்ள ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஜெயதேவா இதய நோய் சிகிச்சை மருத்துவமனையை திறந்து வைத்தார்.

பின்னர் லலிதாதிரிபுராவில் மூடா சார்பில் நடந்த நிகழ்ச்சியிலும், நஜர்பாத் பகுதியில் புதிதாக பட்டப்பட்டுள்ள போலீஸ் கமிஷனர் அலுவலக திறப்பு விழாவிலும் கலந்துகொண்டார். பின்னர் மைசூரு சித்தார்த்தா நகரில் ரூ.14 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் அலுவலகத்தையும் சித்தராமையா திறந்து வைத்தார்.

இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஏற்கனவே வடகர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். இந்த நிலையில், அவர் 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிற 24-ந்தேதி மைசூருவுக்கு வருகிறார்.

அவர் மைசூரு, சாம்ராஜ்நகர், மண்டியா, ஹாசன் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பிரசாரம் செய்கிறார்.

25-ந்தேதி மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசுகிறார். ராகுல்காந்தி வருகையையொட்டி இந்தப்பகுதியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஜெயதேவா இதய நோய் சிகிச்சை மருத்துவமனை, இந்தியாவிலேயே மிகப்பெரிய இதய நோய்க்கான மருத்துவமனை ஆகும். ஏழை மக்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இதய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இங்கு கிடைக்கும் சலுகைகளை நோயாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்