கடம்பூர்–கயத்தாறு சாலையை ரூ.40 லட்சத்தில் புதுப்பிக்கும் பணி அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்

கடம்பூர்–கயத்தாறு சாலையை ரூ.40 லட்சத்தில் புதுப்பிக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

Update: 2018-03-10 21:30 GMT
கயத்தாறு,

கடம்பூர்–கயத்தாறு சாலையை ரூ.40 லட்சத்தில் புதுப்பிக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

சாலை புதுப்பிக்கும் பணி


தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் இருந்து கயத்தாறு வரை செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அந்த சாலை தற்போது குண்டும்–குழியுமாக உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் சாலையை சீரமைக்க, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து கடம்பூரில் இருந்து கயத்தாறு வரை உள்ள 11 கிலோ மீட்டர் தூர சாலையை ரூ.40 லட்சம் செலவில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணி தொடக்க விழா கடம்பூர் இரட்டை பிள்ளையார் கோவில் முன்பு நேற்று நடந்தது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி கோட்ட பொறியாளர் ஆண்ட்ரோ, கயத்தாறு நகர செயலாளர் கப்பல்ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, இரட்டை பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

குடிநீர் தொட்டிகள் திறப்பு

கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 3–வது வார்டு நடராஜபுரம் தெருவில் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் ஆழ்துளை கிணறுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அதேபோல் 24–வது வார்டு முத்தானந்தபுரம் தெருவில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவிலும், 22–வது வார்டு டால்துரை பங்களா தெருவில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவிலும் புதிய குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, அந்த 3 புதிய குடிநீர் தொட்டிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா, தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், நகராட்சி ஆணையாளர் அச்சையா, பொறியாளர்கள் குருசாமி, அன்னம், சரவணன், நகர அ.தி.மு.க. செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், ஊராட்சி செயலாளர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்