ஆயுத ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள அமைதி நாடு!
பிற நாடுகளுடன் போரிடாத, உள்நாட்டிலும் அமைதி தவழும் அழகான நாடு, சுவிட்சர்லாந்து. ஆனால் இந்நாடு, ஆயுத ஏற்றுமதியில் உலகின் முன்னணி தேசங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் அந்த நாடு ஏற்றுமதி செய்யும் ஆயுதங்களின் மதிப்பு அதிகரித்தே வருகிறது. சுவிட்சர்லாந்து கடந்த ஆண்டு ஏற்றுமதி செய்த போர் ஆயுதங்களின் மதிப்பு அதற்கு முந்தைய ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயுதங்களின் மதிப்பை விட அதிகம்.
இதுகுறித்த அறிக்கையை அந்நாட்டின் பொருளாதார விவகாரங்களுக்கான அரசு செயலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு 477 மில்லியன் டாலர் மதிப்பிலான போர் ஆயுதங்களை 64 நாடுகளுக்கு சுவிஸ் ஏற்றுமதி செய்துள்ளது.
இது, 2016-ம் ஆண்டைவிட 8 சதவீதம் அதிகமாகும். சுவிட்சர்லாந்தின் மொத்த ஏற்றுமதி பொருட்களில் சரிவு ஏற்பட்ட போதும், ஆயுதங்கள் ஏற்றுமதி மட்டும் ஏறுமுகத்தில் உள்ளது. அந்நாட்டில் இருந்து ஏற்றுமதி ஆகும் மொத்தப் பொருட்களில் 0.15 சதவீதம் போர் தளவாடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவற்றில் பாதி அளவு, ஐரோப்பிய நாடுகளுக்கும், ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தனித்தனி நாடுகள் அடிப்படையில் பார்த்தால் கடந்த ஆண்டு ஜெர்மனிக்கு அதிகளவிலான போர் உபகரணங்களை சுவிஸ் ஏற்றுமதி செய்திருக்கிறது.
இந்தப் பட்டியலில் தாய்லாந்து இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா முறையே நான்காம், ஐந்தாம் இடங்களிலும் இருக்கின்றன.