டாஸ்மாக் கடையில் ரூ.3.40 லட்சத்துடன் பிடிபட்ட துணை கலெக்டர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு லஞ்சஒழிப்பு போலீசார் நடவடிக்கை

ஆம்பூரில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்துடன் பிடிபட்ட துணை கலெக்டர் உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2018-03-09 22:15 GMT
வேலூர், 

வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டல டாஸ்மாக் பறக்கும்படை அதிகாரியாகவும், துணை கலெக்டராகவும் குழந்தைவேலு (வயது 54) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலூர், திருவண்ணாமலை உள்பட 6 மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் திடீரென சென்று ஆய்வு செய்வார். ஆய்வின் போது முறைகேடுகளில் ஈடுபடும் சம்பந்தப்பட்ட விற்பனையாளர், மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது இவரது பணியாகும்.

அவ்வாறு முறைகேடுகள் நடக்கும் கடைகளை கண்டும், காணாமல் இருக்க கடையின் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளரிடம் லஞ்சம் வாங்கி செல்வதாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு ஆம்பூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் பறக்கும்படை அதிகாரி குழந்தைவேலு, மேற்பார்வையாளர் முருகேசன் ஆகியோர் ஆய்வு என்ற பெயரில் லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தது.

அதைத்தொடர்ந்து வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜய், விஜயலட்சுமி மற்றும் போலீசார் ஆம்பூர் பை-பாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது டாஸ்மாக் நிர்வாக சேலம் மண்டல பறக்கும்படை அதிகாரியும், துணை கலெக்டருமான குழந்தைவேலுவிடம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் இருந்தது. அதற்கான எந்தவித கணக்கும் அவரிடம் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் அவரையும், அவருடன் இருந்த மேற்பார்வையாளர் முருகேசன், கார் டிரைவர் மணிகண்டன் ஆகியோரையும் பிடித்தனர். பின்னர் 3 பேரையும் விசாரணைக்காக வேலூரில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் இருந்ததை தொடர்ந்து சேலம் மண்டல பறக்கும்படை அதிகாரியும், துணை கலெக்டருமான குழந்தைவேலு, மேற்பார்வையாளர் முருகேசன், கார் டிரைவர் மணிகண்டன் ஆகிய 3 பேர்மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடையில் திடீர் சோதனை நடத்திய போது குழந்தைவேலுவிடம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் கணக்கில் வராத ரொக்கப்பணம் இருந்தது. இதுதொடர்பாக அவர் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் பெறும்போது நேரடியாக பிடிபட்டால் மட்டுமே கைது செய்யமுடியும். அதனால் தற்போது வழக்குமட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராகவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்