மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மையங்களில் அதிகாரி திடீர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மையங்களின் செயல்பாடுகளை மாநில ஒருங்கிணைப்பாளர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களிலும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்காக பல்வேறு மையங்கள் செயல்பட்டு வருகிறது. அதன்படி, பகல் நேர பராமரிப்பு மையம், ஆரம்ப கால பயிற்சி மையம், பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாற்றுத்திறன் மாணவர்களின் கல்வி முன்னேற்றம், சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள் மூலம் வழங்கப்படும் வாழ்வியல் திறன் பயிற்சி, பேச்சு பயிற்சி, பிசியோ தெரபி பயிற்சி, வீட்டு வழி கற்றலில் உள்ள மாணவர்களின் முன்னேற்றம் ஆகியவற்றை சென்னையில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனரக, மாநில ஒருங்கிணைப்பாளர் மாலதி நேற்று நேரில் பார்வையிட்டு களஆய்வு செய்தார்.
இதையொட்டி அவர், கிருஷ்ணகிரி வட்டார வளமைய வளாகத்தில் செயல்படும் பயிற்சி மையத்தில், மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பயிற்சிகள் குறித்தும் பெற்றோர்களிடம் எடுத்து கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், கிருஷ்ணகிரி வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோதண்டபாணி, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் கிருஷ்ணதேஜஸ், ஜெயந்தி, சிறப்பு பயிற்றுனர்கள் அருண்குமார், முருகன், ஜித்தின், சத்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.